உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / வனவிலங்குகள் நடமாட்டம் அதிகரிப்பு; மினி உயர்கோபுர விளக்கு அமைக்கணும்

வனவிலங்குகள் நடமாட்டம் அதிகரிப்பு; மினி உயர்கோபுர விளக்கு அமைக்கணும்

வால்பாறை : வால்பாறை, எஸ்டேட் பகுதியில் மினி உயர்கோபுர மின்விளக்கு அமைக்க வேண்டும் என்று தொழிலாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.வால்பாறை நகராட்சியில், மொத்தம், 21 வார்டுகள் உள்ளன. வால்பாறை நகரில் ஐந்து இடங்களில் உயர் கோபுர மின்விளக்கும், முடீஸ், ரொட்டிக்கடை, சோலையாறுடேம் உள்ளிட்ட பகுதிகளில் மினி உயர்கோபுர மின்விளக்கும் உள்ளன. இது தவிர வால்பாறை நகர் மற்றும் எஸ்டேட் பகுதியில், 2,936 தெருவிளக்குகள் அமைக்கப்பட்டுள்ளன.இந்நிலையில், சமீபகாலமாக வால்பாறையை சுற்றியுள்ள பல்வேறு எஸ்டேட் பகுதியில் இரவு நேரத்தில், யானை, காட்டுமாடு, சிறுத்தை, கரடி போன்ற வனவிலங்குகள் முகாமிடுகின்றன. இதனால், தொழிலாளர்கள் வீட்டை விட்டு வெளியில் செல்ல முடியாத நிலை உள்ளது. எஸ்டேட் பகுதியில் தெருவிளக்குகள் எரியாததால், தொழிலாளர்கள் பரிதவிக்கின்றனர்.எஸ்டேட் பகுதியில் கூடுதல் தெருவிளக்குகள் அமைக்க வேண்டும் என, ஒவ்வொரு கவுன்சில் கூட்டத்திலும், அனைத்து கவுன்சிலர்களும் வலியுறுத்தி வருகின்றனர். ஆனால் நகராட்சி அதிகாரிகள் கண்டு கொள்ளாததால், தொழிலாளர்களின் பாதுகாப்பு கேள்விக்குறியாக உள்ளது.தொழிலாளர்கள் கூறுகையில், 'பெரும்பாலான எஸ்டேட்களில் பயணியர் நிழற்கூரை மிக மோசமான நிலையில் உள்ளது. தொழிலாளர் குடியிருப்பு பகுதியில் தெருவிளக்குகள் எரிவதில்லை.இதனால், இரவு நேரத்தில் காட்டுயானைகள் குடியிருப்பு பகுதிக்குள் நுழைவது கூட தெரியாத நிலையில், உயிருக்கு பயந்து வாழ வேண்டியுள்ளது.எனவே, எஸ்டேட் பகுதியில் பழுதடைந்த நிலையில் உள்ள தெருவிளக்குகளை உடனடியாக சீரமைத்து, கூடுதலாக மினி உயர்கோபுர மின்விளக்குகள் அமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்,' என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ