மஞ்சூர் சாலையில் ரோந்து அதிகரிப்பு
மேட்டுப்பாளையம்; கோவை மாவட்டம் காரமடை வனச்சரகத்திற்குட்பட்ட மஞ்சூர் சாலையில், வனவிலங்குகள் நடமாட்டம் தொடர்பாக காரமடை வனத்துறையினர், 24 மணி நேரமும் ரோந்து பணி மேற்கொண்டு வருகின்றனர்.கோவை மாவட்டம் காரமடையில் இருந்து வெள்ளியங்காடு வழியாக குண்டூர், முள்ளி, மஞ்சூர், கெத்தை, பில்லூர் அணை உள்ளிட்ட பகுதிகளுக்கு செல்லும் சாலையில் வனவிலங்குகள் நடமாட்டம் அதிகம் உள்ளது. கோவை மாவட்டத்தில் இருந்து ஊட்டிக்கு செல்ல மூன்றாவது வழியாக உள்ளதால், இச்சாலையில் சுற்றுலா பயணிகள், மஞ்சூர் வழியாக ஊட்டி செல்லும் உள்ளூர் மக்கள் என பயணிப்போரின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. வெள்ளியங்காட்டில் இருந்து மஞ்சூர் வரை யானை, மான், காட்டுப்பன்றி, கரடி போன்ற வனவிலங்குகள் இச்சாலையில் கடந்த சில நாட்களாக அடிக்கடி உலா வருகிறது. வனவிலங்குகளுக்கு தொந்தரவு ஏற்படுத்தாத வகையில், வாகன ஓட்டிகள் எச்சரிக்கையாக செல்ல வேண்டும் என காரமடை வனத்துறையினர் வாகன ஓட்டிகளுக்கு அறிவுறுத்தி வருகின்றனர்.