அகில இந்திய கூடைப்பந்து போட்டியில் இந்திய விமானப்படை அணி அபாரம்
கோவை; பி.எஸ்.ஜி., ஸ்போர்ட்ஸ் கிளப் சார்பில் ஆண்களுக்கான, 59வது அகில இந்திய அளவிலான கூடைப்பந்து போட்டி, பீளமேடு, பி.எஸ்.ஜி., தொழில்நுட்பக் கல்லுாரி உள் விளையாட்டு அரங்கில் நேற்று முன்தினம் துவங்கியது; வரும், 27ல் நிறைவடைகிறது. இதில், சென்னை இந்தியன் வங்கி அணி, பெங்களூரு பரோடா வங்கி அணி, டெல்லி இந்திய விமானப்படை அணி, கோவை ராஜலட்சுமி மில்ஸ் எச்.எஸ்.ஏ., அணி, டெல்லி இந்திய ராணுவ அணி, சென்னை இந்தியன் ஓவர்சீஸ் வங்கி அணி, இந்திய கப்பல் படை அணி, கேரள மாநில மின் வாரிய அணி என, எட்டு அணிகள் இடம்பெற்றுள்ளன. டெல்லி இந்திய ராணுவ அணியை எதிர்த்து திருவனந்தபுரம் கேரள மாநில மின் வாரிய அணி விளையாடியது. இதில், கேரள மாநில மின் வாரிய அணி, 71-69 என்ற புள்ளி கணக்கில் வெற்றிபெற்றது. டெல்லி இந்திய விமானப்படை அணியை எதிர்த்து பெங்களூரு பரோடா வங்கி அணி விளையாடியது. இதில், இந்திய விமானப்படை அணி, 85-74 என்ற புள்ளிகளில் வெற்றிபெற்றது. சென்னை இந்தியன் ஓவர்சீஸ் வங்கி அணியும், இந்திய கப்பல் படை அணியும் விளையாடியது. பரபரப்பான ஆட்டத்தில் இந்தியன் ஓவர்சீஸ் வங்கி அணி, 80-73 என்ற புள்ளி கணக்கில் வெற்றிபெற்றது. டெல்லி இந்திய விமானப்படை அணியும், ராஜலட்சுமி மில்ஸ் எச்.எஸ்.ஏ., அணியும் மோதின. இதில், இந்திய விமானப்படை அணி, 100-64 என்ற புள்ளி கணக்கில் வெற்றி பெற்றது. போட்டிகள் தினமும் மாலை, 5:30 மணிக்கு துவங்குகிறது; பார்வையாளர்களுக்கு அனுமதி இலவசம்.