பண்டிகை முடிந்தும் ஆப்சென்ட் பெற்றோர்களுக்கு தகவல் தெரிவிப்பு
பொள்ளாச்சி: தீபாவளி முடிந்தும், 10 சதவீத மாணவர்கள் இன்னும் பள்ளிக்கு வரவில்லை என, அரசு பள்ளி தலைமையாசிரியர்கள் தெரிவித்துள்ளனர். பொள்ளாச்சி கல்வி மாவட்டத்தில் உள்ள அரசு பள்ளிகளில், வகுப்பு ஆசிரியர்கள், மாணவர்களின் தனித்திறன், சுய ஒழுக்கம் போன்ற விபரங்களை பெற்றோர்களுக்கு மொபைல்போன் எண் வாயிலாக தகவல் தெரிவித்தும் வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக, பள்ளிகள்தோறும், தீபாவளி முடிந்தும் பள்ளிக்கு வராத மாணவர்கள் கண்டறியப்பட்டு வருகின்றனர். தொடர்ந்து, அவர்களின் பெற்றோரைத் தொடர்பு கொண்டு, பள்ளிக்கு வரவழைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. தலைமையாசிரியர்கள் கூறியதாவது: பள்ளிகள் தோறும், மொத்த மாணவர் எண்ணிக்கையில், 10 சதவீதம் பேர், தீபாவளி முடிந்தும் வரவில்லை. மாணவர், பள்ளிக்கு வராத தகவலை பெற்றோர் அறிந்து கொள்ளும் வகையில் அவர்களுக்கு அழைப்பு விடுத்து, தகவல் தெரிவிக்கப்படுகிறது . சில மாணவர்கள், பெற்றோரை ஏமாற்றி பள்ளி வருவதை தவிர்த்து விடுகின்றனர். அதிலும், 10ம் வகுப்பு, பிளஸ் 2 மாணவர்கள் சிலரும், இன்னும் பள்ளி திரும்பாத நிலையில், முக்கிய பாடங்களை நடத்த முடியாமல் ஆசிரியர் திணறுகின்றனர். வரும், திங்கள் கிழமை முதல் மாணவர்கள் வருகை முழுமையாக உறுதி செய்யப்படும். இவ்வாறு, கூறினர்.