கோவை: புதுமையான துத்தநாக உரத்துக்கு, தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கு காப்புரிமை வழங்கப்பட்டுள்ளது. வேளாண் பல்கலையின், யாழினி, தியாகேஸ்வரி, ஆனந்தம், செல்வி, மாரிமுத்து, மணிகண்டன், சித்ரா ஆகியோரடங்கிய விஞ்ஞானிகள் குழுவினருக்கு, இந்த துத்தநாக உரத்தைக் கண்டறிந்தமைக்காக, இந்திய அரசின் காப்புரிமைக் கழகத்தால் காப்புரிமை வழங்கப்பட்டுள்ளது. முனைவர் பட்ட ஆய்வின்போது, ஆய்வு நிறைவில், நீடித்த வேளாண்மைக்காக, சுற்றுச்சூழலுக்கு உகந்த எக்ஸோ பாலிசாக்கரைடு எனப்படும் பொருளை பயன்படுத்தி, புதுமையான 'கிலேட்டட் துத்தநாக உரம்' உருவாக்கப்பட்டது. சோடிக் தன்மை கொண்ட நெல் வயலின், வேர்ப் பகுதிகளில் இருந்து பெறப்பட்ட பேசிலஸ் பாராலிச்செனிபார்மிஸ் என்ற நன்மை பயக்கும் பாக்டீரியாவின் செல் சுவரில் இருந்து, இந்த இ.பி.எஸ்., பிரித்தெடுக்கப்பட்டுள்ளது. துத்தநாக அயன்களைப் பிணைக்கும் திறன், இந்த இ.பி.எஸ்சுக்கு உண்டு. எனவே, இது, 16.8 சதவீத துத்தநாகம் கொண்ட சுற்றுச்சூழலுக்கு உகந்த, துத்தநாக -இ.பி.எஸ் நுண்ணூட்ட உரம் தயாரிக்க உதவுகிறது. இதை பயன்படுத்துவதால், வழக்கமாக பரிந்துரைக்கப்படும் 'இஸட்என்எஸ்ஓ4' உரத்தை விட தாவர வளர்ச்சியும், விளைச்சலும் அதிகரித்துள்ளது. காப்புரிமை பெறுவதற்கான வழிமுறைகளுக்கு, டீன் சுரேஷ்குமார் வழிகாட்டினார். காப்புரிமை பெற்றவர்களை பல்கலை துணைவேந்தர் (பொ) தமிழ்வேந்தன் வாழ்த்தினார்.