உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / வாகனங்கள் உள்ளே; மக்கள் வெளியே! பழைய பஸ் ஸ்டாண்டில் மக்கள் அவதி

வாகனங்கள் உள்ளே; மக்கள் வெளியே! பழைய பஸ் ஸ்டாண்டில் மக்கள் அவதி

பொள்ளாச்சி- பொள்ளாச்சி பழைய பஸ் ஸ்டாண்டில் மக்கள் காத்திருப்பு பகுதி, கட்டணமில்லா வாகனம் நிறுத்துமிடமாக மாறியுள்ளது.பொள்ளாச்சி நகராட்சியில், பழைய மற்றும் புதிய பஸ் ஸ்டாண்டுகள் உள்ளன. பழைய பஸ் ஸ்டாண்டில், கோவை, திருப்பூர், பழநி உள்ளிட்ட பகுதிகளுக்கு செல்லும் பஸ்களும், புதிய பஸ் ஸ்டாண்டில், வால்பாறை மற்றும் கேரளா மாநிலம், கிராமப்புறங்களுக்கு செல்லும் பஸ்களும் நிறுத்தி இயக்கப்படுகின்றன.பழைய பஸ் ஸ்டாண்டில், பொதுமக்கள் அமரும் இருக்கைகள், காத்திருப்பு பகுதி முழுவதும் ஆக்கிரமித்து கடைகள் விரிக்கப்பட்டுள்ளன. இதனால், பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுகிறது. இந்நிலையில், பஸ் ஸ்டாண்டில் கோவை பஸ்கள் நிறுத்தப்பகுதியில் மக்கள் காத்திருப்பு பகுதி முழுவதும், வாகனங்கள் நிறுத்துமிடமாக மாறியுள்ளதால் மக்கள் அதிருப்தி அடைந்துள்ளனர்.சமூக ஆர்வலர்கள் கூறியதாவது:பழைய பஸ் ஸ்டாண்டில், கோவை பஸ்கள் நிற்கும் பகுதி அருகே, பயணியர் காத்திருப்பு பகுதி உள்ளது. தற்போது, அந்த இடம், கட்டணமில்லா வாகனம் நிறுத்துமிடமாக மாறியுள்ளது. வாகனங்கள் தாறுமாறாக நிறுத்தப்படுவதால், மக்கள் பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதனால், மக்கள் வெளியே வெயிலிலும், மழையிலும் நனைந்தபடி காத்திருக்க வேண்டிய சூழல் உள்ளது.மேலும், இருக்கையில் அமர வேண்டுமென்றால், அங்கு நிறுத்தப்பட்ட வாகனங்களை கடந்து சாகசம் செய்து சென்று அமர வேண்டும். அங்கு நிறுத்தப்பட்ட வாகனங்களில், ஒரு சில வாகனங்களில், 'டிஎன்எஸ்டிசி' என்றும், போலீஸ் என்றும் எழுதப்பட்டு நிறுத்தப்பட்டுள்ளன.அதிகாரிகளே விதிமுறை மீறும் போது, மற்றவர்களும் தங்களது வாகனங்களை நிறுத்திச் செல்வது வாடிக்கையாகி விட்டது. இதை தடுக்க, நகராட்சி நிர்வாகமும் எவ்வித நடக்கையும் எடுக்கவில்லை. இதனால், பொதுமக்கள் அவதிக்குள்ளாகின்றனர்.பஸ் ஸ்டாண்டில், வாகனம் நிறுத்த ஒதுக்கப்பட்ட பகுதியில் மட்டுமே வாகனங்களை நிறுத்த அறிவுறுத்துவதுடன், மக்கள் பயன்பாட்டுக்கு ஏற்ப வசதிகளை மேம்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு, கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ