| ADDED : ஜன 30, 2024 12:22 AM
கோவை;வெள்ளிங்கிரி மலை அடிவார பழங்குடியின மக்களிடம், மீட்டர் வட்டிக்கொடுமை அரங்கேறியது வெளிச்சத்துக்கு வந்துள்ளது. வெள்ளிங்கிரி மலை அடிவாரத்திலுள்ள தானிகண்டிபதி, மடக்காடு, பட்டியார்கோவில்பதி, முள்ளாங்காடு ஆகிய வனத்துறை செட்டில்மென்ட் பகுதிகளில் மலைவாழ் மற்றும் பழங்குடியின மக்கள் வசிக்கின்றனர்.அரசால் வழங்கப்பட்ட பட்டா நிலங்களில், வனத்துறையால் அனுமதி பெற்று அங்கு விவசாயம் செய்து மக்கள் வாழ்க்கை நடத்தி வருகின்றனர். இச்சூழலில், கோவை நகரிலிருந்து செல்லும் கந்து வட்டி மற்றும் மீட்டர் வட்டி கும்பல், மலைவாழ் மற்றும் பழங்குடியின மக்கள் வசிக்கும் பகுதிகளுக்குள் நுழைந்து, அவர்களுக்கு குறைந்தபட்ச வட்டியில் கடன் தருவதாக, ஆசை வார்த்தை கூறி, அவர்களுக்கு கடன் வழங்கினர்.கடன் வழங்கிய பின், அப்பாவி பழங்குடி மற்றும் மலைவாழ்மக்களிடம், வட்டிக்கு வட்டி கணக்கிட்டும், அதற்கு கூட்டு வட்டி வசூலித்தும் சிலருக்கு மீட்டர் மற்றும் கந்து வட்டி வசூலித்தும் கொடுமை செய்தனர்.கடன் தொகைசெலுத்த முடியாதவர்களை மிரட்டியதோடு, கோவை நகரில் அரசியல் கட்சியினர் மற்றும் சில அமைப்புகள்நடத்தும் ஆர்ப்பாட்டம், போராட்டங்களில் பங்கேற்க வாகனங்களில் கட்டாயப்படுத்தி அழைத்து சென்றனர்.மீட்டர் மற்றும் கந்து வட்டி கும்பல் மீது நடவடிக்கை எடுக்க கோரி, மலைவாழ் மற்றும் பழங்குடி இன மக்கள் கலெக்டர் கிராந்திகுமார், மாவட்ட வன பாதுகாவலர் ராமசுப்ரமணியன் மற்றும் மாவட்ட வன அலுவலர் ஜெயராஜ் ஆகியோரிடம், நேரில் மனு கொடுத்தனர்.