உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / சங்கனுார் ஓடையில் 23 வீடுகள் மாற்றிடம் வழங்க அறிவுறுத்தல்

சங்கனுார் ஓடையில் 23 வீடுகள் மாற்றிடம் வழங்க அறிவுறுத்தல்

கோவை: கோவை நவ இந்தியா அருகே சிவாஜி நகர் பகுதியில், சங்கனுார் ஓடை கரையில் வசிக்கும், 23 குடும்பங்களுக்கு மாற்று வீடுகள் வழங்குவதற்கான நடவடிக்கை எடுக்க, மேயர் ரங்கநாயகி அறிவுறுத்தியுள்ளார்.கோவை நகர் பகுதி வழியாக கடந்து செல்லும் சங்கனுார் ஓடையின் இரு கரையையும் ஆக்கிரமித்து, ஆயிரக்கணக்கான வீடுகள் உள்ளன. இவர்களுக்கு மாற்றிடம் வழங்கி விட்டு, ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும். ஓடையின் கரையில் வழித்தடம் அமைத்து, அரைவட்டச்சாலை உருவாக்க, மாநகராட்சி திட்டமிட்டுள்ளது.மழைக்காலங்களில் சங்கனுார் ஓடையில் தண்ணீர் சென்றால், கரையில் உள்ள வீடுகளில் வசிப்போருக்கு ஆபத்து ஏற்படும். 27வது வார்டுக்கு உட்பட்ட நவ இந்தியா அருகே சிவாஜி நகர் பகுதியில், 23 வீடுகளில் வசிக்கும் குடும்பங்களுக்கு மாற்று குடியிருப்பு வழங்க, தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்துக்கு மாநகராட்சி நகரமைப்பு பிரிவினர் ஏற்கனவே கடிதம் எழுதியுள்ளனர். அத்துறை அதிகாரிகள் கண்டுகொள்ளாமல் விட்டு விட்டனர்.அப்பகுதியை சேர்ந்தவர்கள் முறையிட்டதை தொடர்ந்து, மேயர் ரங்கநாயகி, நகரமைப்பு அலுவலர் குமார், உதவி நகரமைப்பு அலுவலர் சத்யா ஆகியோர் நேற்று கள ஆய்வு செய்தனர். அங்கு வசிக்கும் மக்கள், மாற்று வீடு வழங்கினால் இடம் பெயர்ந்து செல்ல ஒப்புக் கொண்டனர். இதையடுத்து, நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்துக்கு நினைவூட்டு கடிதம் எழுதி, பருவ மழை துவங்குவதற்கு முன், வீடுகள் ஒதுக்க, நடவடிக்கை எடுக்க, மேயர் ரங்கநாயகி அறிவுறுத்தினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை