மாடித்தோட்டம் அமைக்க ஆர்வமா? தோட்டக்கலைத்துறை அழைப்பு
சூலுார்: மாடித்தோட்டம் அமைக்க ஆர்வமுள்ளவர்களுக்கு, ஆறு வகையான காய்கறி விதைகளை, தோட்டக்கலைத்துறை வழங்குகிறது. சூலுார் வட்டார தோட்டக்கலைத்துறை அறிக்கை: சூலுார் வட்டார தோட்டக்கலைத்துறை சார்பில், மாநில தோட்டக்கலை வளர்ச்சி திட்டத்தின் கீழ், மானிய விலையில் மாடித்தோட்ட தொகுப்பு வழங்கப்பட்டு வருகிறது. இன்றைய சூழலில் காய்கறிக்கென, மாதந்தோறும் கணிசமான தொகை ஒதுக்க வேண்டியுள்ளது. எளிய முறையில் மாடித்தோட்டம் அமைத்து காய்கறி சாகுபடி செய்தால், செலவு குறையும். மாடித்தோட்ட தொகுப்பில், ஆறு வகையான காய்கறி விதைகள், செடி வளர்ப்பு பைகள், 6 கிலோ தென்னை நார் கட்டிகள், வேப்ப எண்ணெய், அசோஸ்பைரில்லம், பாஸ்போ பாக்டீரியா, டிரைகோடேர்மா விரிடி போன்றவையும், வளர்ப்பு முறை குறித்த கையேடு ஆகியவை வழங்கப்படுகின்றன. இவை, மானிய விலையில், 450 ரூபாய்க்கு வழங்கப்படுகிறது. முதலில் வருவோருக்கு முன்னுரிமை என்ற அடிப்படையில் வழங்கப்படுகிறது. ஆதார் நகல், பாஸ்போர்ட் அளவு புகைப்படம் ஆகியவற்றை சமர்ப்பிக்க வேண்டும். ஒரு குடும்பத்துக்கு, அதிகபட்சமாக, இரு தொகுப்புகள் வழங்கப்படும். ஆர்வமுள்ளவர்கள், சூலுார் தோட்டக்கலைத்துறை அலுவலகத்தை அணுகி பயன்பெறலாம். இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.