சத்துணவு உதவியாளர் பணிக்கு நேர்முகத்தேர்வு ஒத்திவைப்பு
வால்பாறை; வால்பாறை நகராட்சியில் காலியாக உள்ள ஐந்து சத்துணவு உதவியாளர் பணியிடங்களுக்கான நேர்முகத்தேர்வு மழை காரணமாக ஒத்திவைக்கப்பட்டது.வால்பாறை நகராட்சியில் மொத்தம், 89 சத்துணவு மையங்கள் உள்ளன. இதில், தற்போது வரை, 38 சத்துணவு அமைப்பாளர், 25 சமையலர், 60 உதவியாளர் பணியிடங்கள் காலியாக உள்ளன.ஆனால், ஐந்து உதவியாளர்களுக்கு மட்டுமே நேர்முகத்தேர்வு நடத்த மாவட்ட நிர்வாகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இப்பணியிடங்களுக்கு, 49 பேர் விண்ணப்பித்துள்ளனர். மழை காரணமாக நேர்முகத்தேர்வு ஒத்திவைக்கப்பட்டதாக நகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர்.சத்துணவு பணியாளர்கள் கூறியதாவது:வால்பாறையில் உள்ள, 89 சத்துணவு மையங்களில் அமைப்பாளர், உதவியாளர், சமையலர் என, 120 பணியிடங்கள் காலியாக உள்ளன. இதனால், ஒரு சத்துணவு அமைப்பாளர் இரண்டு மையங்களை கவனிக்க வேண்டிய நிலை உள்ளது.மேலும், பெரும்பலான சத்துணவு மையங்களில் அமைப்பாளர்களே இல்லை. மாணவர் எண்ணிக்கை 10க்கும் குறைவாக இருந்தால், அங்கு சமையலர் ஒருவர் மட்டுமே பணிபுரிந்து வருகின்றனர்.வால்பாறையில் உள்ள பள்ளிகளில் படிக்கும் மாணவர்களின் நலன் கருதி, காலியாக உள்ள பணியிடங்களுக்கு உடனடியாக நேர்முகத்தேர்வு நடத்த வேண்டும்.இவ்வாறு, என்றனர்.