பஸ் டிரைவருக்கு மிரட்டல்; பா.ஜ.,வினர் 6 பேர் கைது
வால்பாறை : வால்பாறையில், அரசு பஸ் டிரைவருக்கு மிரட்டல் விடுத்த, 6 பேரை போலீசார் கைதுசெய்தனர்.வால்பாறைக்கு சுற்றுலா வருவோர், ரோட்டோரத்தில் வாகனங்களை நிறுத்தி செல்வது வாடிக்கையாக உள்ளது. பல இடங்களில், குறுக்கு ரோட்டை அடைத்து வாகனங்களை நிறுத்துகின்றனர். இதனால், பொதுமக்களுக்கும், போக்குவரத்துக்கும் இடையூறு ஏற்படுகிறது.இந்நிலையில்,வால்பாறைக்கு திருப்பூரை சேர்ந்த, 6 பேர் நேற்று சுற்றுலா வந்தனர். சுப்ரமணிய சுவாமி கோவிலின் முன், போக்குவரத்துக்கு இடையூறாக அவர்களது வாகனத்தை ரோட்டில் நிறுத்தி சென்றனர்.அப்போது, வெள்ளமலை எஸ்டேட்டிலிருந்து வால்பாறை நோக்கி வந்த அரசு பஸ், வாகனம் நிறுத்தப்பட்டதால் செல்ல முடியவில்லை. நீண்ட நேரம் கழித்து குடிபோதையில் அங்கு வந்தவர்களிடம் அரசு பஸ் டிரைவர் வாகனத்தை தள்ளி நிறுத்துமாறு கேட்டனர்.இதனால், ஆத்திரமடைந்த அவர்கள் டிரைவருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அங்கு வந்த பெண் போலீசாரையும், அரசு பஸ் டிரைவரையும் தகாத வார்த்தையில் திட்டி, மிரட்டல் விடுத்துள்ளனர்.இதுகுறித்து, அரசு பஸஅ டிரைவர் சரவணன் கொடுத்த புகாரின் பேரில், போலீசார் வழக்குப்பதிவு செய்து, திருப்பூர் பா.ஜ., மண்டல் பொதுசெயலாளர் முரளிதரன்,35, இளைஞரணி தலைவர் துரைமுருகன்,36, துணைத்தலைவர் வெங்கடேஷ்,25, மண்டல் இளைஞரணி செயலாளர் அருண்,30, மண்டல் பொதுச்செயலாளர் சசிக்குமார்,42, கொடைக்கானலை சேர்ந்த கோதண்டம்,46, ஆகிய 6 பேரை கைது செய்தனர்.