உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / சப் - கலெக்டர் அலுவலகத்துக்கு மிரட்டல் விடுத்தவரிடம் விசாரணை

சப் - கலெக்டர் அலுவலகத்துக்கு மிரட்டல் விடுத்தவரிடம் விசாரணை

பொள்ளாச்சி; பொள்ளாச்சி சப் - கலெக்டர் அலுவலகத்தில், பெட்ரோல் குண்டு வீசுவதாக போனில் மிரட்டல் விடுத்த நபரை பிடித்து, கிழக்கு போலீசார் விசாரிக்கின்றனர்.பொள்ளாச்சியில் இருந்து ஒரு நபர், 100க்கு அழைத்து, அண்ணா பல்கலை மாணவி பாலியல் விவகாரத்தில் நடவடிக்கை எடுக்காவிட்டால், பொள்ளாச்சி சப் - கலெக்டர் அலுவலகத்தின் மீது குண்டு வீசுவேன் என, மிரட்டல் விடுப்பது போன்று செய்து கட் செய்தார்.அந்த எண்ணுக்கு மீண்டும் போலீசார் அழைத்த போது, மொபைல் போன்,'ஸ்விட்ச் ஆப்' செய்துள்ளது தெரிய வந்தது.மிரட்டல் வந்த தகவல், கிழக்கு போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. தகவலின் பேரில், பொள்ளாச்சி சப் - கலெக்டர் அலுவலகத்தில் போலீசார் குவிந்தனர்.ஐந்துக்கும் மேற்பட்ட எஸ்.ஐ.,க்கள், போலீசார் திடீரென குவிந்ததால், சப் - கலெக்டர் அலுவலகம் பரபரப்பாக காணப்பட்டது.பின்னர், சம்பந்தப்பட்ட நபரை பிடித்ததாக தகவல் வந்ததையடுத்து, போலீசார் சப் - கலெக்டர் அலுவலகத்தில் இருந்து கிளம்பினர். மகாலிங்கபுரம் இந்திரா நகரை சேர்ந்த சங்கர், 32 என்பவரை பிடித்து கிழக்கு போலீசார் விசாரிக்கின்றனர்.போலீசார் கூறுகையில், '100 என்ற எண்ணுக்கு அழைத்த நபர், மிரட்டல் விடுத்து போன் துண்டித்துள்ளார். போதையில் இதை செய்தாரா; வேறு ஏதாவது காரணங்கள் உள்ளதா என்பது குறித்தும் விசாரிக்கப்படுகிறது. விசாரணைக்கு பின் முழு விபரங்கள் தெரிவிக்கப்படும்,' என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ