ஐ.பி.எல்., சூதாட்டம்; இருவர் கைது
கோவை; கோவையில், சில வாரங்களுக்கு முன், ஐ.பி.எல்., சூதாட்டத்தில் ஈடுபட்ட ஏழு பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து ரூ.1.09 கோடி பறிமுதல் செய்யப்பட்டது. இதையடுத்து, மாநகர போலீஸ் கமிஷனர் தலைமையிலான சிறப்பு தனிப்படை போலீசார், ஐ.பி.எல்., சூதாட்டத்தில் ஈடுபடும் கும்பலை பிடிக்க நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர். செல்வபுரம் பகுதியில் சிலர், ஐ.பி.எல்., சூதாட்டத்தில் ஈடுபடுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்ததும் சோதனை மேற்கொண்டனர். அப்போது, வடவள்ளியை சேர்ந்த ஸ்ரீதர், 39 மற்றும் பொன்னையராஜபுரத்தை சேர்ந்த பாலகிருஷ்ணன், 39 ஆகியோர், ஐ.பி.எல்., சூதாட்டத்தில் ஈடுபட்டிருப்பது தெரியவந்தது. அதற்காக பயன்படுத்தப்பட்ட, ரூ.1.40 லட்சத்தை தனிப்படை போலீசார் பறிமுதல் செய்து, இருவரையும் செல்வபுரம் ஸ்டேஷனில் ஒப்படைத்தனர். இருவர் மீதும் வழக்கு பதிந்து கைது செய்துள்ளனர்.