ஹோப் காலேஜில் அமைக்க இரும்பு கர்டர்கள் தயார்
கோவை : கோவை - அவிநாசி ரோட்டில், ஹோப் காலேஜ் பகுதியில், இரும்பு கர்டர்கள் ஹைதராபாத்தில் தயாரிக்கப்பட்டு, தயார் நிலையில் உள்ளன.மாநில நெடுஞ்சாலைத்துறையால், கோவை - அவிநாசி ரோட்டில், உப்பிலிபாளையம் முதல் கோல்டுவின்ஸ் வரை, 10.1 கி.மீ., துாரத்துக்கு மேம்பாலம் கட்டப்படுகிறது. ஹோப் காலேஜ் பகுதியில் ரயில்வே தண்டவாளம் அமைந்துள்ள இடத்தில், இரண்டாவது அடுக்கில், 52 மீட்டர் நீளத்துக்கு இன்னும் ஓடுதளம் அமைக்க வேண்டும்.இதற்கான இரும்பு கர்டர்கள் ஹைதராபாத்தில் உள்ள நிறுவனத்தில் தயார் நிலையில் உள்ளன. கர்டர் தயாரிக்க பயன்படுத்திய இரும்பு, நீளம், அகலம், எடை, இணைப்பு பகுதியில் பொருத்தியுள்ள வெல்டிங், அதன் உறுதித்தன்மை உள்ளிட்ட பல்வேறு அம்சங்களையும் லக்னோவில் இருந்து ரயில்வே ஆராய்ச்சி அதிகாரிகள் ஆய்வு செய்து, அனுமதி அளித்தனர். இனி, அரக்கோணம் ரயில்வே அதிகாரிகள் பார்வையிட்டு, அனுமதி கொடுத்ததும் கோவைக்கு தருவிக்கப்பட உள்ளன.இதுதொடர்பாக, மாநில நெடுஞ்சாலைத்துறையினர் கூறியதாவது:இரும்பு கர்டர்கள் ஹைதராபாத்தில் இருந்து கோவைக்கு தருவிக்க ஒரு வாரமாகும். அவற்றை ஹோப் காலேஜ் பகுதியில் பொருத்துவதற்கு, 12 நாட்கள் தேவைப்படும் என ஒப்பந்த நிறுவனத்தினர் கூறுகின்றனர். கர்டர் அமைக்கும் சமயத்தில் ரயில்வே தரப்பில் ரயில் போக்குவரத்தை நிறுத்திக் கொடுக்க வேண்டும். சாலை மார்க்கமாகவும் வாகன போக்குவரத்தை நிறுத்தி, இரும்பு கர்டர்கள் துாக்கி, வைக்கப்படும். அதன் பின், கான்கிரீட் தளம் போடப்படும்.இவ்வாறு, அவர்கள் கூறினர்.