காந்திபுரத்தில் விற்பனைக்கு வரும் கட்டடத்தை வாங்கினால் லாபமா?
கோவை வடக்கு தாலுகா, பெரியநாயக்கன்பாளையம் கிராமத்தில் சுமார், 4 ஏக்கர் நிலத்தில், 26 ஆயிரம் சதுரடி கட்டடம் கட்ட, 2,000 சதுரடி கொண்ட, 13 கட்டடங்களுக்கான அனுமதியை வாங்கியுள்ளனர். இதை, எல்.பி.ஏ., ஏற்றுக்கொள்வார்களா; இல்லையெனில் இதற்கு மாற்று ஏற்பாடு என்ன என்று கூறவும்.-துர்காதேவி, கோவை.அந்த எல்லைக்குட்பட்ட கிராம பஞ்சாயத்து (அ) டவுன் பஞ்சாயத்து மேற்படி, 13 அப்ரூவல்களில் உரிய சீல் மற்றும் கையெழுத்துடன், அதாவது நடவடிக்கை அறிவிப்பு என்ற கடிதம், கட்டட வரைபடத்தில் சீல், கையெழுத்துடன் இருந்து, அவற்றுக்கு வரி விதிப்பு ஆறு ஆண்டுகளுக்கு மேலாக தொடர்ந்து கட்டப்பட்டு வந்திருந்தால், அதை யாரும் ஆட்சேபிக்க இயலாது; வாங்கலாம்.அடுத்து அபிவிருத்தி என முயற்சிக்கும்போது, அந்த கட்டடம் டீ.டி.சி.பி., வாயிலாகத்தான் நடைபெற வேண்டும். டீ.டி.சி.பி.,க்கு உத்தேசித்துள்ள கட்டடத்திற்கு அனுமதி பெறும்போது, ஏற்கனவே உள்ள, 13 கட்டடங்களை சைட் பிளானில், அந்தந்த அப்ரூவல் விபரங்களுடன் காண்பித்தால் டீ.டி.சி.பி., ஏற்றுக்கொள்ளத்தான் வேண்டும். பழைய, 13 அப்ரூவல்களின் அளவு, திறவிடங்கள், உபயோகங்கள் முதலியவை தற்போது மாற்றப்பட்டுள்ள விதிமுறைகள் மீறும் பட்சத்தில், டீ.டி.சி.பி., அவற்றை சுட்டிக்காட்டி, சரி செய்ய சொல்லலாம். அதை நிறைவேற்றி உத்தேச கட்டட மனுவை மீண்டும் சமர்ப்பித்தால், டீ.டி.சி.பி., அனுமதி அளிக்கத்தான் வேண்டும்.திருப்பூர் மாவட்டம், திருமுருகன்பூண்டி கிராமத்தில் எனக்கு இரண்டு ஏக்கர் நிலம் உள்ளது. இதில், 15 ஆயிரம் சதுரடியில் மூன்று 'செட்'டுகள் கட்ட எண்ணி உள்ளேன். கட்டடம் கட்ட அனுமதி பெற, என்ன வழிமுறைகள் என்று கூறவும்.- சங்கரபரணி, திருப்பூர்.திருப்பூர் டீ.டி.சி.பி., அலுவலகத்தில் விண்ணப்பிக்க வேண்டும். அதற்கென்று உள்ள பதிவு பெற்ற பொறியாளர்களை அணுகி, அவர்கள் வாயிலாக விண்ணப்பித்தால் குறிப்பிட்ட காலத்தில் அனுமதி கிடைக்கும். தேவைப்படும் ஆவணங்கள், பத்திரங்கள், விண்ணப்ப படிவங்கள் பற்றி பொறியாளரே உங்களுக்கு அறிவுரை வழங்குவார்.கோவை மாவட்டம், காந்திபுரம் மூன்றாவது வீதியில், ஆறு சென்ட் இடம் மற்றும் தரைதளத்தில், 2,000 சதுரடிகள், முதல் தளத்தில், 2,000 சதுரடிகள், இரண்டாவது தளத்தில், 500 சதுரடிகள் விற்பனைக்கு வருகிறது. இதை என்னவாக மாற்றினால் ஏதுவாக இருக்கும்; மதிப்பீட்டையும் கூறவும்.- பீட்டர் அந்தோணி, கோவை.கட்டடங்களை இடித்துவிட்டு, 10'*10' என்ற முறையில் தரைதளம், முதல் தளம் என, 20 கடைகள் கட்டிவிட்டால் கடைக்கு ரூ.10 ஆயிரம் என, 20 கடைகளுக்கு ரூ.2 லட்சம் வாடகை வரும். எனவே, காலியிடத்தை, ரூ.3 கோடிக்கு வாங்குவதில் தவறில்லை.-தகவல்: ஆர்.எம். மயிலேறு, கன்சல்டிங் இன்ஜினியர்.