அவிநாசி ரோடு பாலம் நீலாம்பூர் வரை நீட்டிக்க வாய்ப்பிருக்குதா? ரூ.600 கோடியில் 5 கி.மீ., துாரத்துக்கு மேலும் ஒரு மேம்பாலம்
கோவை ; கோவை - அவிநாசி ரோட்டில் தற்போது கட்டப்பட்டு வரும் மேம்பாலத்தில், கோல்டுவின்ஸ் பகுதியில் 'ரேம்ப்' கட்டுவதால், நீலாம்பூர் வரை நீட்டிக்க வாய்ப்பில்லை. சின்னியம்பாளையம் முதல் நீலாம்பூர் வரை 5 கி.மீ., துாரத்துக்கு தனி பாலமாக கட்டுவதற்கே வாய்ப்பிருக்கிறது.கோவை - அவிநாசி ரோட்டில், உப்பிலிபாளையம் முதல் கோல்டுவின்ஸ் வரை, 10.1 கி.மீ., துாரத்துக்கு மேம்பாலம் மாநில நெடுஞ்சாலைத்துறையால் கட்டப்படுகிறது. இதை நீலாம்பூர் வரை நீட்டிக்க வேண்டுமென்கிற கோரிக்கை எழுந்தது. இதுதொடர்பாக, சட்டசபையில் ஏற்கனவே அறிவித்திருந்த மாநில நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் வேலு, அவிநாசி ரோடு மேம்பாலப் பணிகளை சமீபத்தில் கள ஆய்வு செய்தார்.இச்சூழலில், 'சின்னியம்பாளையம் முதல் நீலாம்பூர் வரை 5 கி.மீ., துாரத்துக்கு ரூ.600 கோடியில் மேம்பாலம் நீட்டிக்கப்படும்' என, முதல்வர் ஸ்டாலின் அறிவித்திருக்கிறார். நீட்டிக்கப்படும் என்கிற வார்த்தை சேர்ந்திருப்பதால், தற்போதைய மேம்பாலம் நீலாம்பூர் வரை செல்லும் என்கிற எண்ணம் பொதுமக்கள் மற்றும் தொழில் துறையினரிடம் ஏற்பட்டிருக்கிறது.தற்போது கட்டப்படும் மேம்பாலத்தில் கோல்டுவின்ஸ் பகுதியில் 'ரேம்ப்' கட்டப்படுகிறது. இப்பகுதியில் கட்டுமான பணிகளை மாற்றம் செய்து, நீலாம்பூர் வரை நீட்டித்து கட்ட வேண்டும். அவ்வாறு செய்யும் பட்சத்தில், நீலாம்பூர் பகுதி வழியாக கோவை நகரை நோக்கி வரும் வாகனங்கள், விமான நிலையத்துக்குச் செல்ல கீழிறங்க முடியாது. ஹோப்ஸ் காலேஜ் கடந்து 'பன் மால்' பகுதியில் கட்டப்படும் இறங்கு தளத்தில் கீழிறங்கி, 'யூ டேர்ன்' அடித்து, திரும்பி வர வேண்டும்.இதேபோல், உப்பிலிபாளையத்தில் இருந்து செல்வோர் விமான நிலையத்துக்குச் செல்ல, அரவிந்த் கண் மருத்துவமனை முன் இறங்கிக் கொள்ளலாம் அல்லது கோல்டுவின்ஸ் பகுதியில் இறங்கி, 'யூ டேர்ன்' அடித்து, விமான நிலையம் செல்லலாம் என தற்போது இரண்டு வாய்ப்புகள் உள்ளன. நீலாம்பூர் வரை பாலத்தை நீட்டித்தால் கோல்டுவின்ஸ் பகுதியில் இறங்க முடியாது. இதுதவிர, நீலாம்பூர் வரை மேலும் 5 கி.மீ., துாரத்துக்கு மேம்பாலம் கட்ட இன்னும் இரண்டு ஆண்டுகள் ஆகலாம்; அதுவரை தற்போது கட்டியுள்ள பாலத்தை பயன்படுத்தாமல் இருக்க முடியாது. அதனால், சின்னியம்பாளையம் முதல் நீலாம்பூர் வரை 5 கி.மீ., துாரத்துக்கு மேலும் ஒரு மேம்பாலம் அமைக்கவே வாய்ப்புள்ளது.இதுதொடர்பாக, மாநில நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகளிடம் கேட்டபோது, 'நீலாம்பூர் வரை நீட்டிப்பு என அறிவிக்கப்பட்டு இருக்கிறது. கோல்டுவின்ஸ் பகுதியில் 'ரேம்ப்' கட்டும் பணி நடந்து வருகிறது. அவ்விடத்தில் என்னென்ன மாற்றங்கள் செய்ய முடியும் என ஆய்வு செய்யப்படும்' என்றனர்.