உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / குப்பை பிரிப்பதில் கவனம் வேண்டும்: தவறினால் அபராதம் விதிக்கவும் முடிவு

குப்பை பிரிப்பதில் கவனம் வேண்டும்: தவறினால் அபராதம் விதிக்கவும் முடிவு

கோவை;குப்பை சேகரிப்பை கண்காணிக்காமல், தேக்கம் ஏற்படும் பட்சத்தில் சுகாதார பிரிவு அலுவலர்களுக்கு 'மெமோ' தருவதுடன், தனியார் நிறுவனத்துக்கு அபராதம் விதிக்கவும், மாநகராட்சி முடிவு செய்துள்ளது.கோவை மாநகராட்சியில், 2,129 நிரந்தரம், 4,203 தற்காலிக துாய்மை பணியாளர்கள் உள்ளனர். தவிர, 795 கொசு ஒழிப்பு பணியாளர்கள் பணிபுரிகின்றனர். தற்போது, திடக்கழிவு மேலாண்மை பணிகளை 'அவுட் சோர்சிங்' முறையில், தனியார் மேற்கொண்டு வருகின்றனர்.தினமும், 1,250 டன் வரை குப்பை சேகரமாகும் நிலையில், வார்டுகளில் குப்பை மேலாண்மையில் தொய்வு காணப்படுவதாக, கவுன்சிலர்கள் புலம்பி வருகின்றனர். காணும் இடங்களில் எல்லாம், குப்பை தொட்டிகள் நிரம்பி வழிவதே, இதற்கு சாட்சி.குப்பை தேக்கத்தை தவிர்க்க, துாய்மை பணியாளர்களுக்கு 'ரூட் சார்ட்' வழங்கப்பட்டுள்ளதுடன், இரவு நேரங்களில் துாய்மை பணிகளை மேற்கொள்ளவும் உத்தரவிடப்பட்டுள்ளது. இருப்பினும், ஆட்கள் பற்றாக்குறை என்பது, குப்பை தேக்கத்துக்கு முக்கிய காரணமாகவும் உள்ளது.உதாரணத்துக்கு, ஒரு வார்டில், 46 துாய்மை பணியாளர்கள் இருந்த இடத்தில் தற்போது, 26 பேர் மட்டுமே உள்ளனர். தனியார் வசம் சென்றதால், தற்காலிக பணியாளர்கள் மட்டுமே, குப்பை அகற்றும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.நிலைமை இப்படியிருக்க, ஆட்களை அதிகரிக்க வேண்டிய அவசியமும் ஏற்பட்டுள்ளது. குப்பையை தரம் பிரித்து தராததும், குப்பை மேலாண்மைக்கு சிக்கலாக உள்ளது. இதையடுத்து, குப்பையை வீடு தேடி வரும் துாய்மை பணியாளர்களிடம் தரம் பிரித்து கொடுக்க, விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. சுகாதார ஆய்வாளர்கள், மேற்பார்வையாளர்கள் குப்பை மேலாண்மையில் முழு கவனம் செலுத்த, மாநகராட்சி கமிஷனர் சிவகுரு பிரபாகரன் உத்தரவிட்டுள்ளார். புகார்கள் வரும் பட்சத்தில், 'மெமோ' நடவடிக்கை பாயும் எனவும் எச்சரிக்கப்பட்டுள்ளது.

அபராதம் பாயும்!

மாநகராட்சி சுகாதார பிரிவினர் கூறுகையில், 'குப்பையை ரோட்டில் கொட்டாமல், தரம் பிரித்துத் தர பொது மக்களுக்கு வலியுறுத்தப்படுகிறது. தவறினால் வரும் காலத்தில், அபராதம் விதிக்கவும் பரிசீலிக்கப்படுகிறது. குப்பை சேகரிக்காதது உள்ளிட்ட புகார்கள் வரும் பட்சத்தில் தனியார் ஒப்பந்த நிறுவனத்துக்கு அபராதம் விதிக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது' என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை