வெளிமாநில தொழிலாளர்களிடம் ஆவணங்கள் பெறுவது அவசியம்
வால்பாறை: வால்பாறையில், உரிய ஆவணம் இல்லாமல், வெளிமாநில தொழிலாளர்களை பணி அமர்த்தக்கூடாது என, போலீசார் எச்சரித்துள்ளனர்.வால்பாறை எஸ்டேட்டுகளில் பணிபுரிந்த தொழிலாளர்களுக்கு கடந்த, 2001ம் ஆண்டு சம்பளம் குறைக்கப்பட்டதாலும், வனவிலங்கு - மனித மோதல் அதிகரித்ததாலும், ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் திருப்பூர், கோவை, பகுதிகளுக்கு இடம்பெயர்ந்தனர்.இந்நிலையில், தனியார் எஸ்டேட் நிர்வாகங்கள் தொழிலாளர் பற்றாக்குறையை சமாளிக்க, அசாம், பீகார், ஜார்கண்ட், மகாராஷ்டிரா உள்ளிட்ட வெளிமாநில தொழிலாளர்களை அழைத்து வந்து, ஒப்பந்த அடிப்படையில் தேயிலை பறிக்கும் பணியில் ஈடுபடுத்தினர்.வால்பாறையை சுற்றியுள்ள பல்வேறு எஸ்டேட்களில், 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வெளிமாநில தொழிலாளர்கள் பணியாற்றுகின்றனர். ஆனால், பெரும்பாலான எஸ்டேட் நிர்வாகங்கள் அவர்களிடம் உரிய ஆவணங்கள் பெறாமல் பணி வழங்கியுள்ளனர்.போலீசார் கூறியதாவது:தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் வேலை தேடிவரும் வெளிமாநில தொழிலாளர்கள், சில நேரங்களில் குற்ற சம்பவங்களில் ஈடுபடுகின்றனர்.இதனை தடுக்கும் வகையில் வால்பாறையில் உள்ள எஸ்டேட் பகுதியில் பணிபுரியும் வெளிமாநில தொழிலாளர்கள் வேலைக்கு அமர்த்தும் முன், அவர்களிடம் இருந்து புகைப்படம், ஆதார்கார்டு, வாக்காளர் அடையாள அட்டை நகல் பெற்று, அந்தந்த பகுதி போலீஸ் ஸ்டேஷனில் சமர்பிக்க வேண்டும்.எந்த ஆவணமும் இல்லாமல், வெளிமாநில தொழிலாளர்களை பணியில் அமர்த்தக்கூடாது. போலீசாரின் இந்த நடவடிக்கைக்கு எஸ்டேட் நிர்வாகங்கள் ஒத்துழைப்பு அளித்தால் குற்ற சம்பவங்களை தடுக்க முடியும்.இவ்வாறு, கூறினர்.