இரண்டு வருஷமாச்சு; வீட்டுச் சாவி தரலைங்க; அரசு அலுவலகங்களை முற்றுகையிட்ட பயனாளிகள்
கோவை ; 'பணம் கட்டி இரண்டு வருஷமாச்சு; இன்னும் வீட்டுக்கான சாவி தரவில்லை' என கூறி, செல்வபுரம் தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் மற்றும் ஆர்.எஸ்.புரம் வீட்டு வசதி வாரிய அலுவலகங்களை, பயனாளிகள் நேற்று முற்றுகையிட்டனர்.பெரியநாயக்கன்பாளையம், குப்பிச்சிபாளையத்தில், வீட்டு வசதி வாரியம் சார்பில், 1,800 வீடுகள் கட்டப்பட்டுள்ளன. இவற்றுக்கு, 1,800 பயனாளிகள் ஏற்கனவே குலுக்கல் முறையில் தேர்வு செய்யப்பட்டு விட்டனர். ஒவ்வொரு பயனாளியிடம் இருந்து பங்களிப்பு தொகையாக, இரண்டு லட்சம் ரூபாயை வீட்டு வசதி வாரியம் வசூலித்து விட்டது. வீடுகள் கட்டுமான பணியை முடித்து, பயனாளிகளிடம் ஒப்படைக்க வேண்டும். அதன்பின், தொடர் பராமரிப்புக்காக, தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்திடம் குடியிருப்பை வழங்க வேண்டியது வீட்டு வசதி வாரியத்தின் பொறுப்பு.கட்டுமான பணி முடிந்திருந்தாலும், குடிநீர் இணைப்பு இன்னும் வழங்கவில்லை; மின் இணைப்பும் முழுமையாக முடிக்காததால், பயனாளிகளுக்கு வீட்டுச்சாவி வழங்காமல் இழுத்தடித்து வருகின்றனர். பயனாளிகள் வாடகை வீட்டில் அவதிப்பட்டு வருகின்றனர். இச்சூழலில், பராமரிப்பு கட்டணமாக மாதத்துக்கு ரூ.250 வீதம் ஒவ்வொரு பயனாளியும் இதுவரை ரூ.750 செலுத்தியிருக்கின்றனர். வீட்டுக்கான தொகை செலுத்தி இரண்டு வருஷம் ஆகி விட்டது. வீட்டுச் சாவி இன்னும் தரவில்லை; வீட்டுக்கு குடிபோகவே இல்லை. ஆனால், பராமரிப்பு கட்டணமாக, 750 ரூபாய் வசூலிக்கப்பட்டு விட்டது.இதையடுத்து, செல்வபுரத்தில் உள்ள தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய அலுவலகத்துக்கு சில பயனாளிகளும், ஆர்.எஸ்.புரத்தில் உள்ள வீட்டு வசதி வாரிய அலுவலகத்துக்கு சில பயனாளிகளும் நேற்று சென்றனர். இரு அரசு அலுவலகங்களையும் ஒரே நேரத்தில் பயனாளிகள் முற்றுகையிட்டு, கேள்விகளை முன்வைத்த பின், ஒரு வாரத்துக்குள், 100 பயனாளிகளுக்கு வீட்டுச் சாவி வழங்குவதாகவும், அடுத்தடுத்த வாரங்களில் மற்ற பயனாளிகளுக்கு வீட்டுச்சாவி வழங்குவதாகவும் அதிகாரிகள் தரப்பில் உறுதி கூறப்பட்டது.நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய அதிகாரிகளிடம் கேட்ட போது, 'குடிநீர் வசதி, மின் இணைப்பு உள்ளிட்ட வசதிகள் இன்னும் செய்யாததால், பயனாளிகளுக்கு வீட்டுச்சாவி வழங்கவில்லை. மூன்று மாத பராமரிப்பு கட்டணம் முன்வைப்பு தொகையாக பெறப்பட்டுள்ளது. வீடு ஒப்படைத்ததும் கணக்கில் எடுத்துக் கொள்ளப்படும்' என்றனர்.