உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / கஞ்சப்பள்ளிக்கு விடிவு காலம் வந்தாச்சு சுகாதார நிலையம் கட்ட நிதி ஒதுக்கியாச்சு

கஞ்சப்பள்ளிக்கு விடிவு காலம் வந்தாச்சு சுகாதார நிலையம் கட்ட நிதி ஒதுக்கியாச்சு

கோவை : அன்னுார், கஞ்சப்பள்ளியில் இரு ஆண்டுகளுக்கு மேலாக பூட்டப்பட்டுள்ள துணை சுகாதார நிலையத்துக்கு புதிய கட்டடம் கட்டுவதற்கு, 40 லட்சம் ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது.அன்னுார் கஞ்சப்பள்ளி பகுதியில் செயல்பட்டு வந்த துணை சுகாதார நிலையம் பாழடைந்து பயன்படுத்த முடியாத நிலையில் இருந்தது; இரு ஆண்டுகளுக்கு முன் மூடப்பட்டது. அப்பகுதி மக்கள் மிகவும் சிரமத்துக்கு ஆளாகினர். மக்களைத் தேடி மருத்துவ பணியாளர்கள் அப்பகுதியில் முகாமிடும்போது மட்டுமே டாக்டர்களை சந்தித்து பரிசோதிக்க முடிகிறது.அதனால், புதிய கட்டடம் கட்டி உடனடியாக பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும் என, அப்பகுதி மக்கள் தமிழக முதல்வரின் தனிப்பிரிவு, கலெக்டர் உள்ளிட்ட அனைத்து அதிகாரிகளுக்கும் மனு அளித்தனர். இரு ஆண்டுகளுக்கு மேல் கடந்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என, மக்கள் அதிருப்தி தெரிவித்தனர்.அப்பகுதியை சேர்ந்த ராஜன் கூறுகையில், ''துணை சுகாதார நிலையம் எங்கள் பகுதியில் இருந்தால், தினந்தோறும் மக்கள் சிகிச்சைக்கு செல்ல முடியும். மக்களைத் தேடி மருத்துவ பணியாளர்கள் எப்போது வருவார்கள் என்றே தெரியாமல், அவர்களை நம்பி உடல் நலம் இல்லாதவர்கள் காத்திருக்க இயலாது. துணை சுகாதார நிலையத்தை பயன்பாட்டுக்கு உடனடியாக அனுமதிக்க மனு அளித்துள்ளோம்,'' என்றார்.மாவட்ட சுகாதாரத்துறை துணை இயக்குனர் பாலுச்சாமி கூறுகையில், ''அன்னுார் கஞ்சப்பள்ளி துணை சுகாதார நிலையம் கட்டுமான பணிக்கு நிதி மற்றும் நிர்வாக அனுமதி கிடைத்துள்ளது. 2025-26க்கான நிதியில், 40 லட்சம் ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. விரைவில் கட்டுமான பணி துவங்கும்,'' என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை