வேலை தேடிய பெண்ணிடம் ரூ.30.50 லட்சம் மோசடி
கோவை; ஆன்லைனில் வேலை தேடிய பெண்ணிடம், டிரேடிங் ஆசை காட்டி பணம் மோசடி செய்தவர்கள் குறித்து, போலீசார் விசாரிக்கின்றனர்.சரவணம்பட்டி பகுதியை சேர்ந்தவர் பவித்ரா, 34. இவர் ஐ.டி., நிறுவனத்தில் கடந்த ஆறு ஆண்டுகளாக பணியாற்றி வந்தார். பின்னர் வேலையில் இருந்து நின்று விட்டார். ஆன்லைனில் வேறு வேலை தேடி வந்துள்ளார்.அப்போது, அவரை டெலிகிராம் வாயிலாக மர்ம நபர் ஒருவர் தொடர்பு கொண்டார். அவர், 'பெர்த்மின்ட்' என்ற நிறுவனத்தில் இருந்து அழைப்பதாகவும், தங்கள் நிறுவனம் மூலம் ஆன்லைன் டிரேடிங் செய்தால், அதிக லாபம் ஈட்ட முடியும் எனவும் கூறினார்.இதையடுத்து, மோசடி நபர் கொடுத்த பல்வேறு வங்கி கணக்குகளுக்கு, பவித்ரா 13 தவணைகளாக சுமார், ரூ. 30 லட்சத்து 57 ஆயிரத்து 805 அனுப்பினார். பவித்ரா செய்த முதலீட்டுக்கு லாபம் கிடைக்கவில்லை.இதனால், பணத்தை திரும்ப கேட்டுள்ளார். மேலும் பணம் கொடுத்தால் தான், பணத்தை திருப்பித் தர முடியும் என, மோசடி நபர் தெரிவித்தார். பவித்ரா மாநகர சைபர் கிரைம் போலீசில் புகார் அளித்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரிக்கின்றனர்.