உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / கூட்டுக் குடிநீர் திட்ட குழாய் உடைப்பு: பல லட்சம் லிட்டர் நீர் விரயம்

கூட்டுக் குடிநீர் திட்ட குழாய் உடைப்பு: பல லட்சம் லிட்டர் நீர் விரயம்

பொள்ளாச்சி: பொள்ளாச்சி அருகே, குறிச்சி -- குனியமுத்துார் கூட்டுக்குடிநீர் திட்டத்திற்கான பிரதான குழாயில் ஏற்பட்ட உடைப்பு காரணமாக, பல மாதங்களாக குடிநீர் வீணாகிறது. பொள்ளாச்சியில் இருந்து, கோவை குறிச்சி -- குனியமுத்துார் கூட்டுக்குடிநீர் திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இதற்காக, ஆத்துப்பொள்ளாச்சியில் நீரேற்று நிலையம் அமைக்கப்பட்டு, ஆழியாறு ஆற்றில் இருந்து எடுக்கப்படும் தண்ணீர் சுத்தகரிக்கப்பட்டு, போடிபாளையம், ஜமீன்ஊத்துக்குளி, கிருஷ்ணா குளம், ஆச்சிப்பட்டி, கிணத்துக்கடவு வழியாக, குடிநீர் குழாய் பதிக்கப்பட்டுள்ளது. இத்திட்டத்தில், கிணத்துக்கடவு பேரூராட்சிக்கு உட்பட்ட பகுதிக்கும் குடிநீர் வினியோகிக்கப்படுகிறது. இத்திட்டத்துக்காக அமைக்கப்பட்டுள்ள பிரதான குழாயில் பல இடங்களில் உடைப்பு ஏற்பட்டுள்ளது. குறிப்பாக, குளத்துார் அகத்துார் அம்மன் கோவில் அருகே எம்.ஜி.ஆர்., - இந்திரா காலனி, அம்பராம்பாளையம் - குளத்துார் ரோடு சந்திப்பு, போடிபாளையம் பகுதியில் குழாய் உடைப்பு காரணமாக, தண்ணீர் நீருற்றுபோல திறந்தவெளியில் வழிந்தோடுகிறது. கோவில் அருகில் ஏற்பட்டுள்ள உடைப்பில் வெளியேறும் குடிநீர் விவசாய தோட்டத்துக்கு செல்கிறது. குளத்துாரில் வெளியேறும் நீர் வீணாகி மீண்டும் ஆற்றுக்கு செல்கிறது. போடிபாளையத்தில் குப்பை குழி பகுதியில் குழாய் உடைந்து குடிநீர் வழிந்தோடுவதால் குடிநீர் மாசுபடுகிறது. இது குறித்து அப்பகுதி மக்கள் கூறியதாவது: குறிச்சி - குனியமுத்துார் குடிநீர் திட்டத்தில், பல இடங்களில் உடைப்பு ஏற்பட்டு பல மாதங்களாக தினமும், லட்சக்கணக்கான லிட்டர் குடிநீர் வீணாக வழிந்தோடுகிறது. குழாய் உடைப்பை சரி செய்யும் நோக்கில் துறை ரீதியான அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தும் நடவடிக்கை இல்லை. பல லட்சம் ரூபாய் செலவில் குடிநீரை சுத்திகரித்து கொண்டு செல்லும் போது, வழித்தடத்தில் வீணாகிறது. குனியமுத்துார் கூட்டுக்குடிநீர் திட்டத்தில் உடைப்பு ஏற்பட்ட குழாய்களை மாற்றியமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.குடிநீருக்காக மக்கள் அலைமோதும் நிலையில், குடிநீர் வீணாவதை தடுக்க வேண்டும். இவ்வாறு, கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி