கோவை குற்றாலத்தில் குஷி, கொண்டாட்டம்
தொண்டாமுத்தூர் : கோவை குற்றாலத்தில், விடுமுறை தினத்தையொட்டி, 2,800 சுற்றுலா பயணிகள் குளித்து மகிழ்ந்தனர்.கோவை மேற்கு தொடர்ச்சி மலையில், போளுவாம்பட்டி வனச்சரகத்திற்குட்பட்ட பகுதியில், கோவை குற்றாலம் நீர்வீழ்ச்சி அமைந்துள்ளது. இந்த நீர்வீழ்ச்சி, போளுவாம்பட்டி, கோவை குற்றாலம் சூழல் சுற்றுலா வனத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது. சாடிவயல் சோதனை சாவடியில் உள்ள, வனத்துறை டிக்கெட் கவுன்டரில், சுற்றுலா பயணிகள் டிக்கெட் பெற்று, பார்க்கிங் பகுதியில், வாகனங்களை நிறுத்திவிட்டு, வனத்துறையின் வேன்கள் மூலம், பழைய பார்க்கிங் பகுதிக்கு, அழைத்து செல்லப்படுகின்றனர். அங்கிருந்து, சுற்றுலா பயணிகள் நடந்து சென்று, கோவை குற்றால அருவியில் குளித்து மகிழ்கின்றனர். விடுமுறை தினமான நேற்று, 2,500 பெரியவர்களும், 300 சிறுவர்களும் என, மொத்தம், 2,800 பேர் குளித்து மகிழ்ந்தனர். தமிழ் புத்தாண்டு தினமான இன்றும், ஏராளாமான சுற்றுலா பயணிகள் வருவார்கள் என, எதிர்பார்க்கப்படுகிறது.