சி.பி.எஸ்.இ., பள்ளிகளுக்கான கபடி; எஸ்.எஸ்.வி.எம்., பள்ளி சாம்பியன்
மேட்டுப்பாளையம்; மேட்டுப்பாளையத்தில் சி.பி.எஸ்.இ., பள்ளிகளுக்கு இடையே நடந்த, சகோதயா கபடி போட்டியில், எஸ்.எஸ்.வி.எம்., பள்ளி மாணவர்கள், ஒட்டுமொத்த சாம்பியன் பட்டத்தை பெற்றனர். மேட்டுப்பாளையம் ஆலாங்கொம்பில் உள்ள சரஸ்வதி வித்யா மந்திர் சி.பி.எஸ்.இ., பள்ளியில், 46 வது சகோதயா கபடி போட்டிகள், இரண்டு நாட்கள் நடந்தன. கோவை, ஈரோடு, திருப்பூர் மாவட்டங்களை சேர்ந்த, 56 அணிகளை சேர்ந்த, 750 விளையாட்டு வீரர்கள் பங்கேற்றனர். நாக் அவுட் முறையில் போட்டிகள் நடந்தன. 12 வயதுக்கு உட்பட்டோருக்கான போட்டியில், மேட்டுப்பாளையம் எஸ்.எஸ்.வி.எம்., மாணவர்கள் முதலிடம், ஈரோடு சாரதா இன்டர்நேஷனல் பள்ளி மாணவர்கள் இரண்டாமிடம் பெற்றனர். 14 வயதிற்கு உட்பட்டோருக்கான போட்டியில் சிந்தியா வித்யாலயா பள்ளி முதலிடம், எஸ்.எஸ்.வி.எம்., பள்ளி இரண்டாம் இடம் பிடித்தது. 16 வயதிற்கு உட்பட்டோருக்கான போட்டியில், எஸ்.எஸ்.வி.எம்., பள்ளி முதலிடம், கோவை சிந்தியா வித்யாலயா இரண்டாம் இடத்தை பெற்றது. 19 வயதுக்கு உட்பட்டோருக்கான போட்டியில், நல்லாம்பாளையம் அமிர்தா வித்யாலயா பள்ளி முதலிடம், எஸ்.எஸ்.வி.எம்., பள்ளி இரண்டாம் இடத்தை பெற்றது. ஒட்டுமொத்த சாம்பியன் பட்டத்தை, மேட்டுப்பாளையம் எஸ்.எஸ்.வி.எம்., பள்ளி மாணவர்கள் பெற்றனர். வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பள்ளியின் நிர்வாக அறங்காவலர் மணிமேகலை மோகன், தாளாளர் மோகன்தாஸ் ஆகியோர் பதக்கங்களையும், கோப்பைகளையும் வழங்கினர்.