முதல்வர் கோப்பை கபடி; கற்பகம் பல்கலை வெற்றி
கோவை; மாவட்ட அளவிலான முதல்வர் கோப்பைக்கான கபடி போட்டி, கற்பகம் பல்கலையில் நடந்தது. 80க்கும் மேற்பட்ட அணிகள் பங்கேற்றன. பல்வேறு சுற்றுகளையடுத்து நடந்த முதல் அரையிறுதி போட்டியில், கற்பகம் பல்கலை 'ஏ' அணியும், கற்பகம் பல்கலை 'பி' அணியும் மோதின. கற்பகம் பல்கலை 'ஏ' அணி, 12-9 என்ற புள்ளிக்கணக்கில் வெற்றி பெற்றது. இரண்டாம் அரையிறுதி போட்டியில், கற்பகம் பல்கலை 'டி' அணியும், வி.எல்.பி.கலை அறிவியல் கல்லுாரி அணியும் விளையாடின. வி.எல்.பி. கல்லுாரி அணி, 26-22 என்ற புள்ளிக்கணக்கில்வெற்றி பெற்றது. பரபரப்பான இறுதிப்போட்டியில், கற்பகம் பல்கலை 'ஏ' அணியும், வி.எல்.பி. கல்லுாரி அணியும் மோதின. கற்பகம் பல்கலை 'ஏ' அணி, 39-14 என்ற புள்ளிக்கணக்கில் வென்று, சாம்பியன் பட்டத்தை பெற்றது. மூன்றாமிடத்தை கற்பகம் 'பி' அணியும், நான்காமிடத்தை கற்பகம் 'டி' அணியும் பெற்றன. வெற்றி பெற்ற வீரர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. கற்பகம் பல்கலை துணைவேந்தர் ரவி, பதிவாளர் பிரதீப், உடற்கல்வி துறை இயக்குனர் சுதாகர் உள்ளிட்டோர் பாராட்டினர்.
போலீஸ் அணி வெற்றி
அரசு ஊழியர்களுக்கான முதல்வர் கோப்பை கபடி போட்டியில், நேற்று நான்கு அணிகள் விளையாடின. முதல் அரையிறுதியில், தமிழ்நாடு மின் வாரிய அணியும், கோவை மாவட்ட போலீஸ் அணியும் மோதின. தமிழ்நாடு மின் வாரிய அணியினர், 28-20 என்ற புள்ளிக்கணக்கில், கோயம்புத்துார் மாவட்ட போலீஸ் அணியை வென்றனர். இரண்டாம் அரையிறுதியில், காளப்பட்டி ரெட் டிராகன்ஸ் அணியும், கோவை போலீஸ் அணியும் மோதின. 16-7 என்ற புள்ளிக்கணக்கில், கோவை போலீஸ் அணி வெற்றி பெற்று, இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றது.