உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / கழிவுநீரின் பிடியில் கவுண்டம்பாளையம் குடியிருப்பு; நரக வேதனையை அனுபவிக்கும் குடியிருப்புவாசிகள்

கழிவுநீரின் பிடியில் கவுண்டம்பாளையம் குடியிருப்பு; நரக வேதனையை அனுபவிக்கும் குடியிருப்புவாசிகள்

கோவை; கவுண்டம்பாளையம் ஹவுசிங் யூனிட்டில் பெருக்கெடுக்கும் கழிவு நீரால் துர்நாற்றம் வீசுவதுடன், குழந்தைகளுக்கு டெங்கு காய்ச்சல் பாதிப்பு தொடர்வது பெரும்அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.கவுண்டம்பாளையத்தில் உள்ள வீட்டு வசதி வாரிய அடுக்குமாடி குடியிருப்பில், 1,848 வீடுகள் உள்ளன. அரசு அலுவலர்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள இக்குடியிருப்பானது எட்டு 'பிளாக்'குகளை கொண்டுள்ளது.இக்குடியிருப்புகளில் இருந்து வெளியேறும் கழிவு நீரானது பி1, பி2 பிளாக்குகள் பின்புறம் உள்ள பிரதான கழிவுநீர் சேகரிப்பு அமைப்பு வாயிலாக வெளியேற்றப்படுகிறது.ஆனால், கழிவுநீர் சேகரிப்பு அமைப்பில் சேறு படிந்தும், இதர கழிவுப்பொருட்களால் அடைத்தும் கடந்த ஒரு மாதத்துக்கு மேலாக கழிவுநீர் வெளியேறி வருகிறது. துவக்கத்தில், பி1, பி2 பிளாக்குகள் முன்பு தேங்கிவந்த கழிவுநீர் தற்போது இதர பிளாக்குகள் நோக்கியும் பாய்ந்து வருகிறது.வெளியே கால்வைக்க முடியாத அளவுக்கு கழிவுநீரின் பிடியில் இக்குடியிருப்பு வாசிகள் சிக்கி தவிக்கின்றனர்.வாகன நிறுத்தம் வரை செல்லும் கழிவுநீரால் மக்கள் மூக்கை பிடித்துக்கொண்டு செல்லும் அவலம் உள்ளது. மேலும், காய்ச்சல், சளி பாதிப்புகள் அதிகரித்துள்ளதால், வீட்டு வசதி வாரியம் மற்றும் மாநகராட்சி நிர்வாகத்தினர் இதற்கு நிரந்தர தீர்வுகாண கோரிக்கைவிடுக்கின்றனர்.குடியிருப்புவாசிகள் கூறுகையில்,'இங்குள்ள கழிவுநீர் சேகரிப்பு அமைப்பு மூன்று ஆண்டுளுக்கும் மேலாக பராமரிக்கப்படாததால் சேறும், சகதியும் நிரம்பி வழிகிறது. இதனால், கொசு உற்பத்தியாகி டெங்கு காய்ச்சல் ஏற்பட்டு வருகிறது. இதையறிந்து மாநகராட்சி சார்பில் மருத்துவ முகாம்களும் நடத்தப்பட்டு வருகின்றன. இப்பிரச்னைக்கு நிரந்தர தீர்வுகாண வேண்டும்' என்றனர்.

உடனடி தீர்வு!

கோவை வீட்டுவசதி வாரிய நிர்வாக அதிகாரி வெங்கடேஷிடம் கேட்டபோது,''மாநகராட்சியுடன் இதுகுறித்து பேசியுள்ளோம். கழிவுநீர் தேக்க பிரச்னைக்கு உடனடி தீர்வு காணப்படும்,'' என்றார்.மாநகராட்சி கமிஷனர் சிவகுரு பிரபாகரனிடம் கேட்டபோது,''எஸ்.டி.பி., அமைத்து கழிவுநீரை சுத்திகரித்து அனுப்புதல் உள்ளிட்டவை வாரியத்தின் பொறுப்பு. இருப்பினும், கழிவுநீர் பிரச்னை குறித்து வாரியத்திடம் பேசி நடவடிக்கை எடுக்கப்படும்,'' என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை