கோவையில், உள்ள அனைத்து ஓட்டல்களின் உணவு ஐட்டங்களை ஒரே இடத்தில் சுவைக்க வேண்டுமா...உடனே கிளம்புங்கள் கொடிசியா மைதானத்தில் நடக்கும் கோயம்புத்துார் உணவு திருவிழாவுக்கு!கோவை மாவட்ட ஓட்டல் உரிமையாளர்கள் சங்கம் ஏற்பாடு செய்துள்ள, இந்த உணவு திருவிழாவில், 150 உணவு ஸ்டால்கள் அமைக்கப்பட்டுள்ளன.ஒவ்வொரு ஸ்டாலிலும் விதம் விதமான சுவை அள்ளுவதால், கடந்த இரண்டு நாட்களாக கோவை மக்கள், குழந்தைகளுடன் உற்சாகமாக உண்டு மகிழ்ந்து வருகின்றனர். 150 ரூபாய் இருந்தால் போதும். ருசியான அசைவ உணவு அல்லது சைவ உணவு சாப்பிடலாம். கிரில்டு சிக்கன் இங்கு 100 ரூபாய்க்கு கிடைக்கிறது. இது போல் பல அசைவ வெரைட்டிகளை, 100 ரூபாய்க்கு சுவைக்கலாம்.பிரபல கலைஞர்கள் பங்கேற்கும் இசை மற்றும் நடன நிகழ்ச்சிகளும் உள்ளன. கட்டணம் ரூ.249. 12 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கு ப்ரீ!கோவை ஓட்டல்கள் சங்க செயலாளர் பாலச்சந்திரன் கூறுகையில், ''கோவையில் உள்ள, எல்லா ஓட்டல் உணவும் டேஸ்ட் பார்க்க, இது ஒரு நல்ல வாய்ப்பு; மிஸ் பண்ணக் கூடாது,'' என்றார்.இந்த உணவு திருவிழா, இன்றுடன் நிறைவு பெறுகிறது.
சைவத்தில் பேஷ்!
சைவ உணவு பிரியர்களுக்காக தட்டு இட்லி, பொடி நெய் ஊத்தாப்பம், இடியாப்பம் கடலை கறி, பல்வேறு விதமான சைவ பிரியாணிகள், விதம் விதமான தோசைகள் மற்றும் ஜூஸ் வகைகள் குச்சி ஐஸ், பஞ்சு மிட்டாய், ஐஸ்கிரீம், குளிர்பானங்கள் கிடைக்கின்றன.இது தவிர, சீப்பு சீடை, தேன் குழல், முறுக்கு, பணியாரம், எள் உருண்டை, அதிரசம், மா உருண்டை உள்ளிட்ட ஐட்டங்களும் உள்ளன.