பொள்ளாச்சி: 'இ--பைலிங்' முறையில் உள்ள நடைமுறை சிக்கல்களை சரி செய்ய வலியுறுத்தி, பொள்ளாச்சி வக்கீல்கள் சங்கத்தினர், கோர்ட் பணிகளை புறக்கணித்தனர். பொள்ளாச்சி வக்கீல்கள் சங்க பொதுக்குழு கூட்டம், வக்கீல் சங்க கட்டடத்தில் நடந்தது. வக்கீல் சங்க தலைவர் துரை தலைமை வகித்தார். செயலாளர் உதயகுமார், துணை தலைவர் பிரபு, இணை செயலாளர் அருள்பிரகாஷ், மூத்த வக்கீல் மீரான் மொய்தீன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். கூட்டத்தில், 'இ-பைலிங்' முறையில் உள்ள நடைமுறை சிக்கல் குறித்து விவாதிக்கப்பட்டது. இதற்காக, நேற்று முதல், வரும், 7ம் தேதி வரை கோர்ட் பணியில் இருந்து விலகியிருப்பது என முடிவு செய்யப்பட்டது. அடுத்த கட்ட நடவடிக்கைகள் குறித்து வரும், 8ம் தேதி பொதுக்குழுவில் மீண்டும் முடிவெடுக்க தீர்மானிக்கப்பட்டது. இந்த 'இ-பைலிங்' முறை சம்பந்தமாக தமிழகம், புதுச்சேரி பார் கவுன்சில் தலையிட்டு சுமூக தீர்வு காண வேண்டும். தவறினால், தமிழகம், புதுச்சேரி பார் கவுன்சில் உறுப்பினர் தேர்தலை புறக்கணிக்க, 'ஜாக்' சங்கத்தை கேட்டுக்கொள்ள தீர்மானிக்கப்பட்டது. பொள்ளாச்சி வக்கீல் சங்க தலைவர் கூறியதாவது: உயர்நீதிமன்ற அறிவுறுத்தலின்படி, நேற்றுமுன்தினம் முதல் நேரடியாக மனுக்கள், ஆவணங்கள் தாக்கல் செய்யாமல், 'இ-பைலிங்' முறையில் மட்டுமே பதிவு செய்ய வேண்டும் என தெரிவிக்கப்பட்டது. ஆனால், இங்கு அதற்கான கட்டமைப்பு வசதிகள் இல்லை. அப்லோடு செய்தாலும், டவுன்லோடு செய்ய முடியாத நிலை உள்ளது. இங்குள்ள அலுவலர்கள், ஊழியர்களுக்கு முறையான பயிற்சிகளும் வழங்கப்படவில்லை. பெட்டிஷன் நம்பர் தெரியாத நிலை ஏற்படுகிறது. இதனால், வழக்குகள் பதிவு செய்ய முடியாத நிலை உள்ளது.எவ்விதமான பயிற்சியும் அளிக்காமல் உடனடியாக இதை செயல்படுத்துவதால் நடைமுறை சிக்கல் ஏற்படுகிறது. இது குறித்து ஆய்வு செய்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி, கோர்ட் பணிகளில் இருந்து விலகி இருக்க முடிவு செய்துள்ளோம். கீழமை நீதிமன்றங்களில் கட்டமைப்பு வசதி, பயிற்சி அளித்த பின்னரே இந்த முறையை செயல்படுத்த வேண்டும். இவ்வாறு, அவர் கூறினார். சங்க இணை செயலாளர் கூறுகையில், ''கட்டமைப்பு வசதிகள் ஏற்படுத்தாமல் 'இ-பைலிங்' முறையை செயல்படுத்தினால், ரேஷன் கடை, ஆதார் அட்டை சரிபார்ப்பு பணிக்காக நிற்பது போல நீண்ட வரிசையில் நிற்கும் சூழல் ஏற்படும். முறையாக பயிற்சி அளித்து, கட்டமைப்பு ஏற்படுத்தி செயல்படுத்த வேண்டும்,'' என்றார்.