உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / பாதிக்கப்படும் பெண்களுக்கு சட்டப்பாதுகாப்பு நிச்சயம்

பாதிக்கப்படும் பெண்களுக்கு சட்டப்பாதுகாப்பு நிச்சயம்

- நமது நிருபர் -மாவட்ட நீதித்துறை சார்பில் பாலின சமத்துவம், பெண்களுக்கு அதிகாரமளித்தல் மற்றும் பணியிடங்களில் பெண்களுக்கு எதிரான பாலியல் தொல்லைகளை தடுப்பது குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி மற்றும் கருத்தரங்கம் திருப்பூரில் நடந்தது. முதன்மை மாவட்ட அமர்வு நீதிபதி குணசேகரன் தலைமை வகித்து பேசியதாவது: தமிழகத்தில் பணியிடங்களில் பெண்களுக்கு ஏற்படும் பாலியல் துன்புறுத்தல் (தடுப்பு, தடை மற்றும் தீர்வு) சட்டம், 2013 அமல்படுத்தப்பட்டது. பெண்களுக்கு பாதுகாப்பு மற்றும் பாதுகாப்பான பணியிடத்தை உறுதி செய்தல், பெண்களை பாலியல் தொல்லையிலிருந்து பாதுகாப்பது, பெண் ஊழியர்களின் உரிமைகளும், மதிப்புகளும் பாதுகாக்கப்பட வேண்டும் என்பது இச்சட்டத்தின் முக்கிய நோக்கமாகும். இதன் வாயிலாக பெண்கள் பாதிக்கப்படும் போது சட்டரீதியான பாதுகாப்பும் தீர்வும் பெறலாம். நீதித்துறையில் மகளிர் நீதிமன்றம், குடும்ப நல நீதிமன்றம் போன்றவையும், சட்ட உதவி மையங்களும் பெண்களுக்கான சட்டப் பாதுகாப்பினை உறுதி செய்கின்றன. இவ்வாறு அவர் பேசினார். கலெக்டர் மனிஷ் நாரணவரே பேசுகையில், ''பாலின சமத்துவம் என்பது மக்கள் மனநிலையில் ஏற்பட வேண்டும். மக்களிடம் இயற்கையாகவே இந்த உணர்வு ஏற்பட வேண்டும் என்பதற்காகவே இது போன்ற விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தப்படுகிறது. அனைத்து நிறுவனங்களிலும் இச்சட்டத்தை நிலையாக அமல்படுத்துவதை அரசு உறுதி செய்து வருகிறது,'' என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை