உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / கன்றுக்குட்டி, ஆடு, கோழியை  வேட்டையாடிய சிறுத்தை; கூண்டு வைத்து காத்திருக்கும் வனத்துறை 

கன்றுக்குட்டி, ஆடு, கோழியை  வேட்டையாடிய சிறுத்தை; கூண்டு வைத்து காத்திருக்கும் வனத்துறை 

பொள்ளாச்சி; பொள்ளாச்சி அருகே வளர்ப்பு பிராணிகளை வேட்டையாடும் சிறுத்தையால் மக்கள் அச்சமடைந்துள்ளனர். அதை பிடிக்க வனத்துறை கூண்டு வைத்து காத்திருக்கின்றனர்.பொள்ளாச்சி அருகே, ஜமீன் புரவிபாளையம் ஊராட்சிக்கு உட்பட்ட ஜமீன் ஆதியூரில், கடந்த, 3ம் தேதி பாலசுப்ரமணியம் என்பவரது தோட்டத்தில் பசுங்கன்றை சிறுத்தை கடித்து கொன்றது. இதையடுத்து, வனத்துறையினர் அங்கு கண்காணிப்பு செய்து, சிறுத்தை நடமாட்டத்தை உறுதி செய்தனர். அங்கு கூண்டு வைத்து சிறுத்தையை பிடிக்க முயற்சித்தனர். ஆனால், சிறுத்தை சிக்கவில்லை. புரவிபாளையம் மயில்சாமி தோட்டத்துச்சாளையில், நேற்று முன்தினம் காலை, 5:00 மணிக்கு புகுந்த சிறுத்தை, பட்டியில் கட்டப்பட்டு இருந்த ஆட்டுக்குட்டியை கடித்து கொன்றது. தோட்ட உரிமையாளர் சப்தம் போட்டதையடுத்து, ஆட்டை விட்டு சிறுத்தை தப்பியோடி அருகே இருந்த ஆற்றுப்பகுதி புதருக்குள் சென்றது.ஆட்டை கொன்ற சிறுத்தையை வனத்துறையினர் பிடிக்க கூண்டு வைத்து கண்காணிப்பு பணியை தீவிரப்படுத்தினர்.இந்நிலையில், ஆனந்த் முருகேஷ் என்பவரது தோட்டத்துக்கு நேற்று காலை, 11:00 மணிக்கு பகலிலேயே வந்த சிறுத்தை, கோழியை கவ்வி சென்றதாக கூறப்படுகிறது. இதுபோன்று வளர்ப்பு பிராணிகளை குறி வைத்து சிறுத்தை வேட்டையாடுவது தொடர்வதால் மக்கள் பீதி அடைந்துள்ளனர்.பொதுமக்கள் கூறுகையில், 'ஆற்றுப்பகுதிக்குள் மறைந்து கொண்டு இரவில் மட்டும் வந்த சிறுத்தை, தற்போது பகலிலேயே வெளிவரத்துவங்கியுள்ளது. இதன் நடமாட்டதால் வெளியே செல்லவே அச்சமாக உள்ளது.வனத்துறையினர் கூண்டு வைத்துள்ளனர். ஆனால், சிறுத்தை சிக்கவில்லை. அதிகாரிகள் தொடர் கண்காணிப்பை மேற்கொண்டு சிறுத்தையை பிடித்து வனப்பகுதியில் விட நடவடிக்கை எடுக்க வேண்டும்,' என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ