மக்கள் வாழ்வில் ஒளி பெருகட்டும்! ஆதினங்கள், மடாதிபதிகள் வாழ்த்து
கோவை; தீபாவளி பண்டிகையையொட்டி, பொதுமக்களுக்கு கோவையிலுள்ள ஆதினங்கள், பீடாதிபதிகள் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர்பேரூராதினம் சாந்தலிங்க மருதாசல அடிகளார்: நரகாசுரன் மக்களுக்கு தீங்கு இழைத்ததால், மஹாவிஷ்ணு வதம் செய்த நாள் தீபாவளி. 'நர அகம்' என்றால், தான் மட்டுமே இவ்வுலகில் வாழ்ந்தால் போதும் என்பது பொருள். இதற்கு நேர் எதிராக, 'சுப ரகம்' என்று ஒன்று உண்டு. அனைவரும் நன்றாக இருக்க வேண்டும் என்று நினைப்பது. இதையே சொர்க்கம் என்கிறோம். நமக்குள்ளே இருக்கும் அசுரத்தன்மையை அழித்து எடுத்து, நமக்குள்ளே தெய்வத்தன்மையை வரவழைத்து, வளப்படுத்தி இப்பண்டிகையை கொண்டாட வேண்டும். பட்டாசு வெடித்தும் புத்தாடை அணிந்தும், இனிப்புகளை பரிமாறியும், மகிழ்ச்சியுடன் கொண்டாடுகிறோம்.இப்படி, இப்பண்டிகை வாயிலாக, நம்மிடம் ஒரு மாற்றத்தை கொண்டுவர வேண்டும். தீயகுணங்களை நற்குணமாக மாற்றிக்கொள்ள வேண்டும். அனைத்து மக்களும் வளமாக வாழ வேண்டும்.சிரவை ஆதினம் குமர குருபர சுவாமிகள்: தீபாவளி, இந்துக்களின் பாரம்பரிய பண்டிகை. நம்நாட்டில் மட்டுமல்ல, உலகம் முழுக்க கொண்டாடப்படும் பண்டிகை. இது இந்துக்களின் மரபுவழி விழாவாகவும் போற்றப்படுகிறது. ஒவ்வொரு பகுதியிலும், வெவ்வேறு விதமாக கொண்டாடப்படுகிறது. நரகாசுரனை அழித்து, தேவர்களுக்கெல்லாம் விடிவெள்ளியாக கிருஷ்ணர் இருந்தார் என்பதை இப்பண்டிகை உணர்த்துகிறது. அதிகாலை எண்ணெய் தேய்த்து, ஸ்நானம் செய்து, புத்தாடை அணிந்து, பெரியவர்களிடம் ஆசிர்வாதம் பெற்று வழிபட வேண்டும்.சர்வதேச அளவில், பல்வேறு நாடுகளில் போர் மேகங்கள் சூழ்ந்து, ஏராளமான மனித உயிர்கள் போரில் அழிந்து வருவது, மிகப்பெரும் வருத்தத்தை ஏற்படுத்துகிறது.இது, மனித இனத்துக்கு மிகப் பெரும் அச்சத்தையும், சவாலையும் ஏற்படுத்தி வருகிறது. போர் அச்சம் நீங்கி, எல்லா மக்களுக்கும், எல்லா வளங்களும் கிடைத்து, பெரு மகிழ்ச்சியோடும் அமைதியோடும், வாழ வேண்டும்;அதற்கு இறைவன் துணை நிற்க வேண்டும். ஸ்ரீமத் தர்மராஜா அருள் பீடம் அன்னதான மடாலயம் தவத்திரு கிருஷ்ணமூர்த்தி அடிகளார்: மொழி, இனம், மதம் கடந்து, அனைத்து மக்களும் ஒற்றுமையுடன் கொண்டாடப்படும் மகத்தான பண்டிகை தீபாவளி. ஆண்டு முழுவதும் பல பண்டிகைகள் வந்தாலும், தீபாவளிக்கு என்று தனி சிறப்பு ஒன்று உண்டு. அன்றைய தினம் ஏழை, பணக்காரர், உயர்ந்தவர், தாழ்ந்தவர் என்ற பாகுபாடு இல்லாமல் எல்லோரும் எண்ணெய் வைத்து நீராடி புதியதீபம் ஏற்றி கொண்டாடப்படுவது இனிமை பயக்கும். இந்த நாளில் அனைவரது குடும்பங்களிலும், மகிழ்ச்சி பொங்க, அன்பும், பாசமும் நிரம்ப வேண்டும் நாட்டில் வறுமை நீங்கி, மாதம் மும்மாரி பொழிந்து, வலிமை பொருந்திய நாளாக, இந்த தீபாவளி திருநாள் அமைய வேண்டும். அனைவரும் நீண்ட ஆயுளும், எல்லா நலன்களும் பெற்று, பெருவாழ்வு வாழ வேண்டும்.காமாட்சிபுரி ஆதினம் பஞ்சலிங்கேஸ்வர சுவாமிகள்: தீமை என்னும் இருளை நீக்கி, மனதில் தூய்மை எண்ணங்களை பரவச் செய்யும் தினமே தீபாவளி. மனித வாழ்க்கை ஒரே முறை தான். நிலையாமை என்ற இந்த உலகில் அன்புடனும், பண்புடனும் வாழ வேண்டும். மனித வாழ்க்கை மலையை போன்று உயரமானது. அதில் நிறைய படிக்கட்டுகளை கொண்டது. இந்த படிக்கட்டுகளை சிரமப்பட்டு, பொறுமையாகவும், நிதானமாகவும் ஏறினால் மட்டுமே, மலைமீது உள்ள ஜோதியான, ஒளிமயமான வாழ்வை பெற முடியும். அதற்கான முயற்சி மேற்கொள்ள அனைவரும் இந்நன்னாளில் வாழ்த்துக்கள்.மலுமிச்சம்பட்டி நாகசக்திபீடம் ஸ்ரீ ல ஸ்ரீ பாபுஜி சுவாமிகள்: மனித வாழ்வில் பணம், அதிகாரம், பதவி எதுவும் நிலையானது இல்லை என்பதை உணர்த்துவதற்கும், அதர்மம் செய்பவர்களுக்கு தக்க தண்டனை கிடைக்கும் என்ற தத்துவத்தை உணர்த்தும் விதமாகவும், நரகாசுரனை வதம் செய்து தர்மத்தை நிலை நாட்டிய நாள் தீபாவளி திருநாள். அன்பெனும் ஜோதி அருட்பெருஞ்ஜோதியை அனைவர் மனதிலும் ஏற்றி, வாழ்க்கையில் சந்தோஷம் பொங்கிட, சகல வளமும் கிடைத்திட, இந்த தீபாவளி திருநாளில், அனைவருடைய வாழ்வும் சிறப்படைய வேண்டும்.ஸ்ரீ அய்யனார் ஆதினம் ஸ்ரீ மாரியப்பசுவாமிகள்: தீபாவளி, ஒளிகளின் திருவிழா. இந்த விழா தீமைகள் அழிந்து, நன்மைகள் பெருகும் பண்டிகையாகும். உலகின் பல்வேறு பகுதிகளில் மகிழ்ச்சியுடனும், புத்தாடைகளுடனும் கொண்டாடப்படுகிற திருவிழா. வீட்டில் விளக்குகள் ஏற்றி, இறைவனை மனதார வழிபட்டு தீபங்களின் ஒளியில், உங்கள் வாழ்வில் மகிழ்ச்சி என்ற ஒளி பெருகும் ஆண்டாக அமையட்டும். இவ்வாறு, ஆதினங்கள், பீடாதிபதிகள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.