உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / இனி யானைகள் பலியாகாது என நம்பலாம்! செயற்கை நுண்ணறிவு திட்டம் துவக்கம்

இனி யானைகள் பலியாகாது என நம்பலாம்! செயற்கை நுண்ணறிவு திட்டம் துவக்கம்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

போத்தனூர்:கோவையில், ரயிலில் மோதி யானைகள் பலியாவதை தவிர்க்க, செயற்கை நுண்ணறிவு கண்காணிப்பு திட்டம் துவக்கி வைக்கப்பட்டது.கோவையில் மதுக்கரை -- வாளையார் இடையே, தண்டவாளத்தை கடக்கும்போது ரயில் மோதி யானைகள் பலியாவது தொடர்ந்து நடந்தது. இதனை தவிர்க்க ஏழு கோடி ரூபாய் மதிப்பீட்டில், செயற்கை நுண்ணறிவு கண்காணிப்பு திட்டம் செயல்படுத்தப்பட்டது. இதற்காக, ஏ மற்றும் பி லைன்களில், 12 கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. இதன் இயக்கத்தை நேற்று, வனத்துறை கூடுதல் முதன்மை செயலர் சுப்ரியா சாகு முன்னிலையில், அமைச்சர் மதிவேந்தன் துவக்கி வைத்தார். யானை தாக்கி பலியானோர், காயமடைந்தோருக்கு உதவி தொகைக்கான காசோலை, வன காவலர்களுக்கு முதலுதவி பெட்டி, டார்ச் லைட் உள்ளிட்டவைகளை வழங்கினார். வன விலங்குகளை கொண்டு செல்ல, ஆம்புலன்ஸ் வாகனத்தை வழங்கினார்.

கூடுதல் முதன்மை செயலர் சுப்ரியா சாகு கூறியதாவது: கடந்த, 2008 முதல் இதுவரை, 11 யானைகள் இவ்வழித்தடத்தில் பலியாகியுள்ளன. தற்போது துவக்கப்பட்டுள்ள இத்திட்டத்தால், 24 மணி நேரமும், கண்காணிப்பு இருக்கும். ஏ மற்றும் பி லைன்களுக்கு இடையே, சிறு வனப்பகுதி உள்ளது. இங்கும் விலங்குகள் இருக்கும். இதனை கண்காணிக்க, ட்ரோன் கேமரா பயன்படுத்தப்படுகிறது. செயற்கை நுண்ணறிவு கண்காணிப்பில், யானைகள் எப்போது, எங்கே, எதற்காக இடம் மாறுகிறது என துல்லியமாக தெரிந்து கொள்ளலாம். ஓராண்டு முடிவில் அவ்விபரம் வரும்போது, தொழில்நுட்ப வசதியை மேலும் மேம்படுத்தி, யானைகள் பலியாவதை முற்றிலும் தவிர்க்க முடியும். வனத்திற்குள் தண்ணீர் தொட்டி அமைத்தல், உணவு கிடைக்கச் செய்தல் போன்றவையும் மேற்கொள்ளப்படும். அகழி தோண்டுவதும் நடக்கும். இத்துறையை நவீனப்படுத்த, 52 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்பத்தை பயன்படுத்தி புதிய திட்டங்களை செயல்படுத்துவது குறித்து ஆய்வு செய்ய குழு அமைக்கப்பட்டுள்ளது. கேரள மாநில வனத்துறையினருடன், பேச்சுவார்த்தை நடத்தப்பட்டுள்ளது. அவர்கள் அளிக்கும் தகவல்கள் அடிப்படையிலும் நடவடிக்கை எடுக்கப்படும். தேவையான பணியாளர்கள் தேர்வு செய்யப்படுவர். இவ்வாறு, அவர் கூறினார். முதன்மை தலைமை வன பாதுகாவலர் சுப்ரத் மோகபத்ரா, தலைமை வன பாதுகாவலர் சீனிவாஸ் ரெட்டி, ஆனைமலை புலிகள் காப்பக கள இயக்குனர் ராமசுப்ரமணியன், மாவட்ட வன அலுவலர் ஜெயராஜ், கோவை மாநகராட்சி துணை மேயர் வெற்றிசெல்வன் உட்பட பலர் பங்கேற்றனர்.

ரயிலை நிறுத்தவும் முடியும்'

நிருபர்களிடம் அமைச்சர் மதிவேந்தன் கூறியதாவது:செயற்கை நுண்ணறிவு கண்காணிப்பு திட்டத்தின் கீழ் மூன்று கட்டங்களாக, யானைகளின் நடமாட்டம் கண்காணிக்கப்படும். தண்டவாளத்திலிருந்து சிறிது தொலைவில், அருகில், மிக அருகில் என தொலைவை கணித்து, வனத்துறை, ரயில்வே துறையினருக்கு தகவல் அனுப்பப்படும். ஒலி எழுப்பப்படும். தேவைப்படும் பட்சத்தில், ரயிலை நிறுத்தவும் முடியும்.யானைகளின் வழியில் உள்ள, ஆக்கிரமிப்புகளை அகற்றவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. யானைகளுக்கு விருப்பமான பயிர்களை பயிரிடுவதை தவிர்க்க, விவசாயிகளுக்கு அறிவுறுத்தப்படுகிறது. அவுட்டுக்காய் வெடியை பயன்படுத்தக்கூடாது என, விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. பறவையினங்களை காக்கவும், நடவடிக்கை எடுக்கப்படுகிறது. இவ்வாறு, அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ