காந்திபுரம் : காந்திபுரத்தில் அமைந்துள்ள செம்மொழி பூங்காவை காண, பொதுமக்களுக்கு இன்று முதல் அனுமதி அளிக்கப்படுகிறது. இங்கு இடம்பெற்றுள்ள செடி, கொடி, மரங்கள் ஆண்டுக்கு, 80 ஆயிரம் டன் ஆக்ஸிஜனை வெளியிடும்; 1.50 லட்சம் டன் கார்பன்-டை-ஆக்சைடை உள்வாங்கும் என்கிறார், இப்பூங்காவை வடிவமைத்த, கட்டடக்கலை வல்லுனர் ரூப்மதி ஆனந்த்.செம்மொழி பூங்கா என்ப து, பொதுமக்கள் வெறுமனே பொழுதை கழிப்பதற்காக மட்டுமின்றி, இயற்கையோடு இணைந்து வாழவும் கற்றுத்தரும். அரியவகை தாவரங்களை பாதுகாப்பது, சுற்றுச்சூழல் விழிப்புணர்வு, பசுமை சுற்றுலாவின் மையமாக மாற்றுவது, என அரிய நோக்கங்களுடன் செம்மொழி பூங்கா அமைக்கப்பட்டுள்ளது. கட்டடக்கலை வல்லுனர் ரூப்மதி ஆனந்த் கூறியதாவது: செம்மொழி வனத்தில், பழங்கால தமிழர்களின் நாடோடி பாடல்கள், குறிஞ்சி பாடலில் இருக்கக்கூடிய செடி, கொடி, மர வகைகள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. ஐந்திணை வனத்தில் பல வகையான தாவரங்கள் இடம்பெற்றுள்ளன. அமைதி வனம்
மலர் வனத்தில் மலர் வகைகள் கவரும். முதல் முறையாக இங்கு அமைதி வனம் அமைத்துள்ளோம். இதில், நம்மை சுய பரிசோதனைக்கு உட்படுத்திக்கொள்ளலாம். நம்மை பற்றி யோசிக்க வைக்கும்; மன அமைதி தரும். செடிகள் மட்டுமின்றி வண்ணம், சிலைகள், சுவரோவியங்களும் உள்ளன. மகரந்த வனத்தில் தேன் சுரக்கும் மலர்கள் இருக்கும். வண்டு, பட்டாம்பூச்சிகள் தேன் அருந்துவதை பார்க்க முடியும். மூலிகை வனம்
மூலிகை வனம் என்பது நோய்க்கு, தீர்வு தரும் மருத்துவ குணம் உள்ள மூலிகைகள் கொண்ட அழகிய குறுங்காடு. இப்படி, 30க்கும் மேற்பட்ட வனங்களில், 2,000 வகையான, 6 லட்சத்துக்கும் மேற்பட்ட செடி, கொடி, மரங்கள் வைக்கப்பட்டுள்ளன. இயற்கை ததும்பிய இதுபோன்ற இடங்களை விசிட் செய்தால், இனம் புரியாத சந்தோஷம் கிடைக்கும். இயற்கை மட்டுமே இவற்றை தரமுடியும். இயற்கையை ரசித்தால், இயற்கையை பாதுகாப்போம்; அழிக்க மாட்டோம். 80 ஆயிரம் டன் ஆக்ஸிஜன்
கோவை மண்ணுக்கு உரிய செடிகள்தான், இங்கு இடம்பெற்றுள்ளன. அரிய வகையான களிபுடா, மலை பூவரசு உள்ளிட்ட மரங்கள், மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் இருந்து கொண்டு வரப்பட்டுள்ளன. இங்கு இடம்பெற்றுள்ள செடி, கொடி, மரங்கள் ஆண்டுக்கு, 80 ஆயிரம் டன் ஆக்ஸிஜனை வெளியிடும்; 1.50 லட்சம் டன் கார்பன்-டை-ஆக்சைடை உள்வாங்கும். இவ்வாறு, அவர் கூறினார்.