ஏழு மாடி ஏறி, இறங்கும் அவதிக்கு விரைவில் கிடைக்கிறது விமோசனம்
கோவை: சித்தாபுதுாரில் துாய்மை பணியாளருக்கான குடியிருப்பில், குடிநீர் குடங்களுடன் பெண்கள் ஏழு தளங்கள் ஏறி இறங்குவதற்கு விமோசனமாக, குடிநீர் வழங்குவதற்கான பணிகள் விரைவில் துவங்கப்படவுள்ளன.தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் சார்பில் செல்வபுரம், உக்கடம் உள்ளிட்ட இடங்களில் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ், அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டப்பட்டுள்ளன. சித்தாபுதுாரில் துாய்மை பணியாளர்களுக்கென்று ஏழு தளங்களில், 226 குடியிருப்புகள் கொண்ட, குடியிருப்பு கட்டப்பட்டுள்ளது.இதில், ஒதுக்கீடு பெற்றவர்கள் ரூ.1.10 லட்சம் செலுத்தி குடியேறி வருகின்றனர். கடந்த ஆறு மாதங்களில், 80க்கும் மேற்பட்டோர் குடியேறியுள்ளனர். அதேசமயம், அத்தியாவசிய தேவையான குடிநீருக்காக, ஏழு தளங்கள் பெண்கள் இறங்கும் அவலம் காணப்படுகிறது.காம்பவுண்ட் சுவர் இல்லாததுடன், குடியிருப்பை சுற்றிலும் குப்பை கூடாரமாகவும், புதர்மண்டியும் காணப்படுகிறது. சாக்கடை அடைப்பு காரணமாக, கொசு தொல்லையும் அதிகரித்துள்ளது. இங்குள்ள மக்கள் அனுபவிக்கும் அவஸ்தை குறித்த செய்தி, நமது நாளிதழில் 'நெஞ்சில் ஈரம் இல்லையா?' என்ற தலைப்பில், கடந்த செப்., 26ம் தேதி செய்தி வெளியானது.இதையடுத்து, சுற்றுப்பகுதியில் துாய்மை பணிகள் மேற்கொள்ளப்பட்டன. மேலும், குடியிருப்புகளில் பொருத்தப்பட்டுள்ள நான்கு 'லிப்ட்'களும், தற்போது இயங்கி வருகின்றன. ஆனால், லிப்டில் குடிநீர் குடங்களை கொண்டு செல்ல அனுமதி கிடையாது. இன்னும் குடிநீர் தேவைக்காக பெண்கள், வயதானவர்கள் ஏழு மாடிகள் ஏறி சிரமப்படும் நிலையில், விரைவில் தீர்வு காண வேண்டும் என்பது, அனைவரது எதிர்பார்ப்பு.அங்கு வசிப்பவர்கள் கூறுகையில், 'குடியிருப்பின் சுற்றுப்பகுதியில் அரைகுறையாக சுத்தம் செய்தனர். பின்னர், இங்குள்ள மகளிர் சுய உதவி குழுவினர், காந்தி ஜெயந்தியன்று துாய்மை பணிகள் செய்து மரக்கன்றுகள் நட்டனர். இதனால், ஓரளவு சுத்தமாக காணப்படுகிறது. முக்கிய பிரச்னையான கீழே இருந்து, குடிநீர் எடுத்து செல்வதற்கு தீர்வுகாண வேண்டும். தவிர, கழிவுநீர் குழாய் கசிவு, சாக்கடை உள்ளிட்ட பிரச்னைகளையும் சரிசெய்ய வேண்டும்' என்றனர்.
'அடுத்த வாரம் துவக்கம்'
தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய நிர்வாக பொறியாளர் மாடசாமியிடம் கேட்ட போது, ''டெண்டர்' முடிந்து விட்டதால் அடுத்தவாரம் பணிகள் துவங்கப்படவுள்ளன. ஒவ்வொரு தளத்துக்கும் குடிநீர் குழாய் இணைப்பு வழங்கப்படும். தொடர்ந்து, சுற்றுப்பகுதியில் துாய்மை, கழிவுநீர் குழாய்களில் கசிவு செய்தல் போன்ற பணிகளும் மேற்கொள்ளப்படும்,'' என்றார்.