குப்பை மாற்று நிலையத்தால் நரக வாழ்க்கை; சுகாதார சீர்கேட்டில் வாழும் புல்லுக்காடு மக்கள்
கோவை; உக்கடம், புல்லுக்காடு பகுதி குப்பை மாற்று நிலையத்தில் இருந்து வெளியேறும் துர்நாற்றம், கழிவுநீரில் உருவாகும் புழுக்களால் நோய் பாதிப்பு என, கடும் நெருக்கடியில் வசிப்பதாக அப்பகுதி மக்கள் குமுறுகின்றனர்.மாநகராட்சி, 86வது வார்டு உக்கடம், புல்லுக்காடு பகுதியில் உள்ள குப்பை மாற்று நிலையத்தில் சேகரமாகும் குப்பை, வெள்ளலுார் குப்பைக்கிடங்குக்கு கொண்டு செல்லப்படுகிறது.இப்பணிகளை தனியார் மேற்கொள்ளும் நிலையில், பணி மந்தமாக நடப்பதால் குப்பை சேகரித்து வரும் வாகனங்கள், குப்பை மாற்று நிலையத்துக்கு வெளியேவரிசை கட்டி நிற்பதாகவும், வெள்ளலுார் கிடங்குக்கு செல்வதில் தொய்வு ஏற்படுவதாகவும், அப்பகுதி மக்கள் புலம்பி வருகின்றனர்.இந்த வார்டுக்கு உட்பட்ட அல்அமீன் காலனி, ரோஸ் கார்டன், நியூ ரோஸ் கார்டன், பிலால் நகர் என, பல்வேறு பகுதிகளில் சுமார், 20 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர்.இந்நிலையில், கடந்த சில நாட்களாக இக்குப்பை மாற்று நிலையத்தில் இருந்து துர்நாற்றம், புழு பூச்சிகள் அதிகரித்துள்ளதாக, சமூக வலைதளங்களில் 'வீடியோ' ஒன்று வைரலாகி வருகிறது.அப்பகுதி மக்கள் கூறியதாவது:இங்கு கழிவுநீர் பண்ணை, மீன் மார்க்கெட், குப்பை மாற்று நிலையம் உள்ளிட்டவற்றில் இருந்து வெளியேறும் துர்நாற்றத்தால், கடும் நெருக்கடியில் வசித்து வருகிறோம்.குப்பை மாற்று நிலையத்தில் இருந்து எடை கணக்கிட்டு, வெள்ளலுார் கிடங்குக்கு அனுப்புகின்றனர். பணிகள் தாமதத்தால், குப்பை சேகரித்துள்ள கன்டெய்னர்கள் வெளியே தேக்கமடைகிறது. அதிலிருந்து புழுக்கள் உருவாகி, குடியிருப்புளுக்குள் நுழைகின்றன. இதனால் நோய் பாதிப்புகளுக்கு ஆளாகிவருகிறோம்.இம்மையத்தில் மருந்து அடித்தல் உள்ளிட்ட சுகாதார பணிகளை தொடர்ச்சியாக செய்வதில்லை. இதனால், இங்கு வசிப்பவர்கள் அடிக்கடி மருத்துவமனைகளுக்கு செல்ல வேண்டியுள்ளது. இதற்கு மாற்று இடம் தேர்வு செய்து, நிரந்தர தீர்வு காண வேண்டும்.இவ்வாறு, அவர்கள் கூறினர். சுகாதார பணிகள்
மாநகராட்சி தெற்கு மண்டல உதவி கமிஷனர் குமரனிடம் கேட்டபோது,''குப்பை மாற்று நிலையத்தில் நேற்று (நேற்று முன்தினம்) ஆய்வு செய்தோம். அங்கு தேங்கியிருந்த கழிவுநீர் அகற்றப்பட்டு மருந்து தெளித்தல் போன்ற சுகாதார பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன,'' என்றார்.