கால்நடைகள் கணக்கெடுப்பு பணி; துவக்கி வைத்தார் கோவை கலெக்டர்
கோவை : கால்நடை பராமரிப்புத் துறை சார்பில், 21-வது கால்நடை கணக்கெடுப்பு பணியினை, கலெக்டர் கிராந்திகுமார் நேற்று துவக்கி வைத்தார்.இதில் கால்நடை பராமரிப்புத் துறை மண்டல இணை இயக்குநர் திருக்குமரன், உதவி இயக்குனர் இளங்கோ, கால்நடை உதவி மருத்துவர்கள் பத்மாவதி, ஜோதி உள்ளிட்டோர் பங்கேற்றனர். கலெக்டர் கூறியுள்ளதாவது:கால்நடை கணக்கெடுக்கும் பணி, ஐந்து ஆண்டுகளுக்கு ஒரு முறை மத்திய அரசின் சார்பில் கால்நடை பராமரிப்புத்துறை மூலம் மேற்கொள்ளப்படுகிறது.கால்நடைகள் தொடர்பான வளர்ச்சி திட்டங்கள் மற்றும் கால்நடைகளின் நலம் பேணுவதற்கு, சரியான தரவுகள் தரும் பொருட்டு, கால்நடை கணக்கெடுப்பு பணி நடக்கிறது.இதில் வீடுகள், கடைகள், தோட்டம், பண்ணைகளில் உள்ள மாடு, எருமை, ஆடு, குதிரை, நாய், பன்றி, கோழி, வாத்து போன்ற அனைத்து வகையான கால்நடைகளும் கணக்கெடுக்கப்படும்.தற்பொழுது நாடு தழுவிய 21 வது கால்நடை கணக்கெடுப்பு பணி, பிப்., 2025 வரை நடக்கிறது. இதற்கு, 234 கணக்கெடுப்பாளர்களும், 48 மேற்பார்வையாளர்களும் நியமிக்கப்பட்டுள்ளனர்.விபரங்களை சேகரிக்க வரும் கணக்கெடுப்பாளர்களுக்கு, பொதுமக்கள் ஒத்துழைப்பு அளிக்கவேண்டும்.இவ்வாறு, கலெக்டர் கேட்டுக்கொண்டுள்ளார்.