மானிய விலையில் மக்காச்சோளம் விதைகள்
மடத்துக்குளம்: மடத்துக்குளம் வட்டாரத்தில், மக்காச்சோளம் சாகுபடி விவசாயிகளுக்கு, விதைகள் மற்றும் செயல்விளக்க திடல் திட்டத்தின் கீழ் மானிய திட்டங்கள் செயல்படுத்தப்படுகிறது. மடத்துக்குளம் வட்டாரத்தில் ஆண்டுக்கு சராசரியாக, 6,300 பரப்பளவில் மக்காச்சோளம் சாகுபடி செய்யப்பட்டு வருகிறது. நடப்பாண்டு மக்காச்சோளம் சாகுபடி செய்யும் விவசாயிகளுக்கு, தேசிய உணவு மற்றும் ஊட்டச்சத்து பாதுகாப்பு திட்டத்தின் கீழ், 6,200 கிலோ வீரிய ஒட்டு ரக மக்காச்சோளம் விதைகள், ரூ. 100 மானியத்தில் வழங்கப்பட்டு வருகிறது. இதில், கோவை வேளாண் பல்கலை மற்றும் தனியார் நிறுவனத்தின் வீரிய ஒட்டு ரக விதைகள், தேவையான அளவு இருப்பு உள்ளது. அதே போல், 186 ஹெக்டேர் பரப்பளவில் மக்காச்சோளம் செயல்விளக்க திடல் அமைக்க, இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இத்திட்டத்தில், விதையுடன், நுண்ணுயிர் உரங்கள், நுண்ணுாட்ட உரங்கள், பயிர் பாதுகாப்பு மருந்துகள் மற்றும் வளர்ச்சி ஊக்கிகள் வழங்கப்படுகிறது. இத்திட்டங்களின் கீழ் பயன்பெற விரும்பும் விவசாயிகள், ஆதார், சிட்டா நகலுடன் வேளாண் விரிவாக்க மையங்களை அணுகலாம், என மடத்துக்குளம் வட்டார வேளாண் உதவி இயக்குனர் வசந்தா தெரிவித்துள்ளார்.