உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / செலவில்லாத தீர்மானமா போடுங்கள்! உள்ளாட்சி வார்டு சபையில் லகலக

செலவில்லாத தீர்மானமா போடுங்கள்! உள்ளாட்சி வார்டு சபையில் லகலக

பொள்ளாச்சி: தமிழகத்தில், நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளில் நடத்தப்படும் வார்டு சிறப்பு கூட்டத்தில், செலவில்லாத தீர்மானங்களை பதிவு செய்ய வேண்டும் என்ற உயர் அதிகாரிகளின் வாய்மொழி உத்தரவால், அதிகாரிகள் அதிர்ச்சியடைந்துள்ளனர். தமிழக அரசு, மாநகராட்சி, நகராட்சி மற்றும் பேரூராட்சிகளில் வார்டு சிறப்பு கூட்டங்களை அக்., 27 முதல் 29 வரை மூன்று நாட்களில் நடத்த உத்தரவிட்டது. அதன்படி, நேற்று பல இடங்களில் இந்த கூட்டம் நடந்தது. கூட்டத்தில், மக்களால் தெரிவிக்கப்படும் ஆலோசனை மற்றும் கருத்து களை பெற்று, அதன் மீது உரிய காலக்கெடுவிற்குள் தீர்வு காண வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. நேற்று, பொள்ளாச்சி நகராட்சி மற்றும் சுற்றுப்பகுதி பேரூராட்சிகளில், அந்தந்த வார்டு கவுன்சிலர் தலைமையில், உள்ளாட்சி அலுவலர் ஒருவரை கூட்டுநராக கொண்டு வார்டு சிறப்பு கூட்டம் நடத்தப்பட்டது. வார்டு மக்கள், குடியிருப்போர் சங்க பிரதி நிதிகள் பங்கேற்றனர். கூட்டத்தில், உள்ளாட்சி அமைப்புகளில் தற்போது வழங்கப்பட்டும் வரும் அடிப்படை சேவைகளான குடிநீர் வழங்கல், திடக்கழிவு மேலாண்மை, தெருவிளக்கு பராமரிப்பு, மரக்கன்று நடவு, பூங்கா பராமரிப்பு. மழைநீர் வடிகால், சாலை பராமரிப்பு, அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் காலை உணவு திட்ட செயல்பாடு, சுகாதாரம், நீராதாரங்களை பாதுகாத்தல் என, குறிப்பிட்ட ஒன்பது இனங்களில் விவாதிக்கப்பட்டது. அதன்பின், மக்களிடம் இருந்து பெறப்பட்ட ஆலோசனை மற்றும் கருத்துக்களில், முன்னுரிமை அடிப்படையில் மூன்று தீர்மானம் தேர்வு செய்யப்பட்டது. நாளை கூட்டம் நடத்தி முடிக்கப்பட்டதும், அந்தந்த நகராட்சி நிர்வாக மண்டல இயக்குநர் மற்றும் பேரூராட்சி மண்டல உதவி இயக்குநர்களுக்கு தீர்மானம் அனுப்பி வைக்கப்பட உள்ளது. ஆனால், முன்னுரிமை அடிப்படையில் செலவில்லாத தீர்மானங்களை மட்டுமே பதிவு செய்யுமாறு, உயர் அதிகாரிகள் வாய்மொழியாக உத்தரவிட்டுள்ளதால் உள்ளாட்சி அதிகாரிகள் அதிர்ச்சியடைந்து உள்ளனர். தேர்தல் நெருங்கும் சூழலில், மூன்று நாட்களில் மக்களின் பிரச்னைகள் கோரிக்கையாக பெறப்பட்டு, தீர்வு காண வார்டு சிறப்பு கூட்டம் நடத்துவது வெறும் கண்துடைப்பு என, மக்கள் புகார் தெரிவிக்கின்றனர். பொதுமக்கள் கூறியதாவது: அதிக நிதிச்சுமை இன்றி செய்யக்கூடிய மூன்று தீர் மானங்கள் மட்டுமே எடுத்துக் கொள்ளப்படும் என, தெரிவிக்கப்பட்டதால், பல பேரூராட்சிகளில் வார்டு சிறப்பு கூட்டம் நடத்தப்படவில்லை. சிலர், கட்சி தலைமையில் நற்பெயர் வாங்கி, அடுத்த தேர்தலிலும் தனக்கான இடத்தை உறுதிபடுத்த, வார்டு சிறப்பு கூட்டம் நடத்தினர். நான்கு ஆண்டுகளாக வார்டுகளில் வலம் வரும் கவுன்சிலர்களுக்கு, அந்த பகுதி பிரச்னை தெரியாமல் இருக்குமா? இத்தனை நாட்க ள் தீர்க்கப்படாத பிரச்னைக்கு மூன்று நாள் வார்டு சிறப்பு கூட்டம் வாயிலாக தீர்வு கிடைக்கும் என்பது கண்துடைப்பு. இவ்வாறு கூறினர். ஏற்கனவே, கிராம ஊராட்சிகளில், முதல்வர் உத்தரவில் முன்னுரிமை அடிப்படையில் மூன்று பணிகள் தேர்வு செய்யப்பட்ட விவகாரத்திலும், நிதி செலவு இன்றி, பராமரிப்பு போன்ற பணிகளை மட்டுமே எடுத்துக்கொள்ள வேண்டும் என, அதிகாரிகள் அறிவுறுத்தியது குறிப்பிடத்தக்கது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை