பெண்ணை ஆபாசமாக படம் எடுத்து மிரட்டியவர் கைது
கோவை; நட்சத்திர ஓட்டலில் வேலை வாங்கி தருவதாக கூறி, பெண்ணை ஆபாசமாக வீடியோ பதிவு செய்து மிரட்டியவரை, போலீசார் கைது செய்தனர்.ஈரோடு மாவட்டம், பெருந்துறையை சேர்ந்தவர் கிளமென்ட் ராஜ், 37; அதே பகுதியில் இருக்கும் ஒரு 'கார்மென்ட்ஸ்' நிறுவனத்தில் மேலாளராக பணியாற்றி வந்தார். இவரது நிறுவனத்தில் பணியில் சேர்வதற்காக விண்ணப்பித்திருந்த, கோவையை சேர்ந்த பெண்ணின் மொபைல் எண்ணில் தொடர்பு கொண்டு, நட்சத்திர ஓட்டலில் வரவேற்பாளர் பணிக்கு ஆள் தேவை. மாதம் ரூ. ஒரு லட்சம் வரை சம்பளம் என அளந்து விட்டுள்ளார்.இதையடுத்து, பெண்ணை நேர்காணல் செய்ய வேண்டும் எனக்கூறி, வீடியோ கால் செய்துள்ளார். தொடர்ந்து, வரவேற்பாளர் பணியில் சேர்வதற்கு உடலில் காயங்கள், தழும்பு இருக்க கூடாது என குறினார். அதை உறுதிபடுத்த வேண்டும் என கூறி, பெண்ணை ஆபாசமாக வீடியோ பதிவு செய்துள்ளார். இதன் பின்னர், அந்த வீடியோவை பெண்ணுக்கு அனுப்பி மிரட்டினார்.அதிர்ச்சியடைந்த அப்பெண், அவரது எண்ணை 'பிளாக்' செய்து, கோவை மாநகர சைபர் கிரைம் போலீசில் புகார் அளித்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து, ஈரோட்டில் இருந்த கிளமென்ட் ராஜை கைது செய்தனர்.சைபர் கிரைம் போலீசார் கூறுகையில், 'நிறுவனத்தில் மேலாளராக பணியாற்றிய போது, பணிக்காக விண்ணப்பிக்கும் பெண்களின் மொபைல் எண்களை எடுத்துக்கொண்டு, அவர்களை தொடர்பு கொண்டு பேசியுள்ளார்.அப்போது, அவர்களுக்கு நல்ல சம்பளத்தில் வேலை வாய்ப்பு வாங்கி தருவதாக கூறி அவர்களை ஆபாசமாக வீடியோ எடுத்து மிரட்டி வந்துள்ளார். நிறுவனத்தில் பணியாற்றிய நபர்களில், 'வாட்ஸ் அப்' பயன்படுத்த தெரியாத நபர்களின் எண்களை பெற்று, அதன் மூலம் பெண்களை அழைத்து வீடியோ பதிவு செய்து வந்துள்ளார். இது வரை ஒரு புகார் மட்டுமே வந்துள்ளது. இதுபோன்று எவ்வளவு பெண்களிடம் நடந்து கொண்டுள்ளார் என்பது குறித்து விசாரித்து வருகிறோம்' என்றனர்.