தொழிலதிபரிடம் ரூ.3 கோடி மோசடி செய்தவர் சிக்கினார்
கோவை:கோவையை சேர்ந்த தொழில்அதிபரிடம், மூன்று கோடி ரூபாய் மோசடி செய்தவரை, போலீசார் கைது செய்தனர்.கோவை, பீளமேடு பகுதியைச் சேர்ந்த, பெயர் குறிப்பிட விரும்பாத தொழிலதிபருக்கு கேரள மாநிலம் முதலமடா பகுதியைச் சேர்ந்த சுனில் தாஸ், 63, என்பவர் பழக்கமானார். இவர், கேரளாவில் நடத்தி வரும் அறக்கட்டளைக்கு, ரிசர்வ் வங்கி, 3.17 ஆயிரம் ரூபாய் கோடி ஒதுக்கியுள்ளது என்றும், அத்தொகையை எடுக்க மூன்று கோடி ரூபாய் செலுத்த வேண்டும் என்று அந்த தொழில் அதிபரிடம் கூறினார். ரிசர்வ் வங்கி பணம் ஒதுக்கியிருப்பது போன்ற ஒரு கடிதத்தையும், போலியாக தயாரித்துக் காண்பித்தார். அதை உண்மை என நம்பிய தொழிலதிபர், 3 கோடி ரூபாயை சுனில் தாஸ் வங்கி கணக்கு கொடுத்தார்.நீண்ட நாட்களாகியும், அப்பணத்தை திருப்பிக் கொடுக்காமல் இருந்ததால், சுனில்தாஸ் மீது சந்தேகம் அடைந்த அந்த தொழிலதிபர் கோவை மாநகர குற்றப்பிரிவு போலீசில் புகார் அளித்தார். வழக்குப்பதிவு செய்து விசாரித்த போலீசார், மதுரையில் தங்கியிருந்த சுனில் தாசை கைது செய்து, கோர்ட்டில் ஆஜர்படுத்தி, சிறையில் அடைத்தனர். இவர், இதுபோல பலரை மோசடி செய்திருப்பது, விசாரணையில் தெரிந்தது.