அரசு பள்ளி மாணவியருக்கு தற்காப்பு கலை பயிற்சி
பொள்ளாச்சி; பொள்ளாச்சி அருகே, தொப்பம்பட்டி அரசு பள்ளியில், மாணவியிருக்கு தற்காப்பு கலை பயிற்சி அளிக்கப்படுகிறது. ஒருங்கிணைந்த பள்ளி கல்வி சார்பில், தொப்பம்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில், மாணவியருக்கு தற்காப்பு கலையான கராத்தே பயிற்சி அளிக்கப்படுகிறது. தலைமையாசிரியர் கணேசன் தலைமை வகித்தார். கராத்தே மாஸ்டர்கள் மணி, கதிரேசன் ஆகியோர் கராத்தே பயிற்சி அளிக்கின்றனர். பயிற்சியின் போது மாணவியருக்கு பெண் பட்டதாரி ஆசிரியர்கள் தேவி, மகாலட்சுமி ஆகியோர் துணையாக இருக்கின்றனர். ஆசிரியர்கள் கூறியதாவது: பள்ளி மாணவியர் எவ்விதமான சூழ்நிலைகளையும் எதிர்கொள்ளும் ஆற்றல் மற்றும் திறனை வளர்க்கும் வகையில், கராத்தே பயிற்சி அளிக்கப்படுகிறது. இளம் வயதிலேயே தற்காப்புக்கலைகளை கற்றுக்கொள்வதால், மாணவியர் கல்லுாரிக்கு செல்லும் போதும், மன தைரியம், பாதுகாப்புடன் இருப்பதை உணர்கின்றனர். இந்தாண்டு அக். மாதம் வரை, வாரந்தோறும் இரு நாட்கள் வீதம் கராத்தே பயிற்சி அளிக்கப்படுகிறது. இவ்வாறு, கூறினர்.