உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / மயிலாடுதுறை, திருச்செந்துார் முன்பதிவில்லா ரயில்கள் ரூட் மாறுமா? கோவைக்கு இயக்க ரயில்வே அமைச்சருக்கு கோரிக்கை

மயிலாடுதுறை, திருச்செந்துார் முன்பதிவில்லா ரயில்கள் ரூட் மாறுமா? கோவைக்கு இயக்க ரயில்வே அமைச்சருக்கு கோரிக்கை

கோவை : 'மயிலாடுதுறை மற்றும் திருச்செந்துாரில் இருந்து பழநி மற்றும் பொள்ளாச்சி வழியாக பாலக்காட்டுக்கு இயக்கப்படும் முன்பதிவில்லாத ரயில் சேவையை, பொள்ளாச்சியில் இருந்து கிணத்துக்கடவு வழியாக கோவைக்கு மாற்றித்தர வேண்டும்' என, மத்திய ரயில்வே அமைச்சருக்கு, கோவை மாவட்ட ரயில் பயனாளர்கள் சங்கத்தினர் கோரிக்கை விடுத்திருக்கின்றனர்.தமிழகத்தில் அதிவேகமாக வளர்ந்து வரும் நகரங்களில் மிகவும் முக்கியமானது கோவை. விமானம் மற்றும் பஸ் போக்குவரத்துக்கு பதிலாக, ரயில் சேவையையே அதிகமான மக்கள் விரும்புகின்றனர். மயிலாடுதுறையில் இருந்து தஞ்சாவூர், திருச்சி, திண்டுக்கல், பழநி, பொள்ளாச்சி மற்றும் கிணத்துக்கடவு வழியாக கோவைக்கு முன்பதிவில்லா பயணிகள் ரயில் இயக்க, ரயில் பயணிகள் சங்கங்கள் கோரிக்கை விடுத்தன.கோரிக்கையை பரிசீலித்த தெற்கு ரயில்வே வெளியிட்ட அறிக்கையில், மயிலாடுதுறையில் புறப்பட்டு பொள்ளாச்சி வழியாக கோவை வருவதற்கு பதிலாக, பாலக்காடு வரை இயக்குவதாக அறிவிக்கப்பட்டிருக்கிறது. இது, கோவை மாவட்ட பயணிகளுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இவ்வாறு, கோவைக்கு வர வேண்டிய ரயில்களை பாலக்காடுக்கு திருப்பி விடுவது இரண்டாவது முறை. இதற்கு முன், திருச்செந்துார் விரைவு ரயிலும், 2021ல் பொள்ளாச்சியில் இருந்து பாலக்காட்டுக்கு அனுப்பப்பட்டது. இவ்விரண்டு ரயில் சேவையையும் பாலக்காட்டுக்கு திருப்பி விடுவதால், கோவை மாவட்ட ரயில் பயனாளிகள் மிகவும் பாதிக்கப்படுகின்றனர். எனவே, இவ்விரு ரயில்களையும் கோவைக்கு மாற்றி இயக்க வேண்டும் என்கிற கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது.இதுதொடர்பாக, மத்திய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஸ்ணவ்க்கு, கோவை மாவட்ட ரயில் பயனாளர்கள் சங்கத்தினர் அனுப்பியுள்ள கோரிக்கை மனு:மயிலாடுதுறை மற்றும் திருச்செந்துாரில் இருந்து முன்பதிவில்லா ரயில் சேவை, பொள்ளாச்சி வழியாக பாலக்காடுக்கு இயக்கப்படுகின்றன. தமிழக ரயில் பயணிகளின் தேவையறிந்து, மயிலாடுதுறையில் இருந்து பழநி, பொள்ளாச்சி, கிணத்துக்கடவு வழியாக கோவை சந்திப்புக்கு வரும் வகையில், முன்பதிவில்லா ரயில் (எண்: 06415/06416), பாலக்காட்டில் இருந்து திருச்செந்துாருக்கு இயக்கப்படும் ரயில் (எண்: 16731/ 16732) சேவையை, பொள்ளாச்சியில் இருந்து கிணத்துக்கடவு வழியாக கோவைக்கு மாற்ற வேண்டும்.இதேபோல், உதய் எக்ஸ்பிரஸ் ரயிலை பொள்ளாச்சி கடந்து, பாலக்காடு வரை நீட்டிக்கும் நடவடிக்கையையும் கடுமையாக எதிர்க்கிறோம். இச்சேவையை பழநி வரை நீட்டித்தால் பயனுள்ளதாக இருக்கும். தெற்கு ரயில்வே நிர்வாகம் சாதகமான நடவடிக்கை எடுக்கும் என நம்புகிறோம்.இவ்வாறு, கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 3 )

Kumaran Arasu
அக் 12, 2024 08:58

மேட்டுப்பாளையம் திருநெல்வேலி டெய்லி ரயில் வேண்டும்


Kumaran Arasu
அக் 12, 2024 08:56

கோவை மயிலாடுதுறை பொள்ளாச்சி வழியாக வேண்டும் .


Gajageswari
அக் 12, 2024 06:25

போத்தனூர் வரை இயக்கலாம்


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை