மாவட்ட அளவிலான விளையாட்டு வென்ற மாணவர்களுக்கு பதக்கம்
கோவை: கோவை மாவட்ட அளவிலான பள்ளி மாணவ, மாணவியருக்கான விளையாட்டு போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு வழங்கப்பட்டது. கோவை மாவட்ட பள்ளி கல்வித்துறை மற்றும் இந்துஸ்தான் கலை மற்றும் அறிவியல் கல்லுாரியின் உடற்கல்வித்துறை இணைந்து, மாவட்ட அளவில் 14, 17, 19 வயதுக்கு உட்பட்ட பள்ளி மாணவ, மாணவிருக்கான, சதுரங்கம், கேரம், சிலம்பம், ஜூடோ, வாள் சண்டை, குத்துச்சண்டை, டேக்வாண்டோ, டெனிகாய்டு ஆகிய போட்டிகள், இந்துஸ்தான் கலை அறிவியல் கல்லுாரியில் நடத்தப்பட்டன. முதல் மூன்று இடங்களை பிடித்தவர்களுக்கு, மாவட்ட பள்ளி கல்வித்துறை சார்பில், பதக்கம், சான்றிதழ் வழங்கப்பட்டன. இந்துஸ்தான் கலை அறிவியல் கல்லுாரியின் செயலர் சரஸ்வதி, இணை செயலர் பிரியா போட்டிகளை, துவக்கி வைத்தனர். மாவட்ட உடற்கல்வி ஆய்வாளர் குமரேசன், போட்டிகளை திறம்பட நடத்துவதற்கு அனைத்து நடுவர்களையும் நியமித்து உத்தரவிட்டதோடு, அனைத்து போட்டிகளையும் ஆய்வு செய்தார். கல்லுாரி செயலர் சரஸ்வதி கூறுகையில், மாணவ, மாணவியர், பள்ளி மற்றும் கல்லுாரி பருவத்தில் கட்டாயம் ஏதாவது ஒரு விளையாட்டில் தங்களை ஈடுபடுத்திக் கொள்ளலாம். இதன் வாயிலாக, படிப்பில் புத்துயிர் பெற்று, அதிக மதிப்பெண் பெற விளையாட்டு நிச்சயம் கை கொடுக்கும்,'' என்றார்.