உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / சிறு வயதில் குழந்தைகள் பூப்பெய்தால் மருத்துவ பரிசோதனை அவசியம்

சிறு வயதில் குழந்தைகள் பூப்பெய்தால் மருத்துவ பரிசோதனை அவசியம்

கோவை; பெற்றோர்களிடம் சமீபகாலமாக காணப்படும் பொதுவான அச்சம், தங்களது பெண் குழந்தைகள் இளம் வயதில் பூப்பெய்வது. ஏனெனில், கோவையில் 2 வயது பெண் குழந்தைக்கு மாதவிடாய் ஏற்பட்ட அதிர்ச்சிகரமான சம்பவம் சமீபத்தில் நடந்தது. இதுபோன்ற தருணத்தில், குழந்தைகளை டாக்டர்களிடம் அழைத்துச் சென்று மருத்துவ பரிசோதனை மேற்கொள்வது அவசியம். கடந்த காலங்களில், 10 வயதுக்கு மேல் 13 வயதுக்குள் பெண் குழந்தைகள் பூப்பெய்தினர். தற்போது, ஆறு வயது முதலே பல குழந்தைகள் பூப்பெய்தும் சம்பவங்கள் நடந்து வருகின்றன. வாழ்வியல் மாற்றங்கள், உணவு பழக்க வழக்கங்கள் இதற்கு முக்கிய காரணமாக மாறியுள்ளது. தவிர, 8 மற்றும் 6 வயதுக்கு முன், குழந்தைகள் பூப்பெய்துவதை மருத்துவ வட்டாரங்களில் இரண்டாக பிரிக்கப்படுகிறது. 'பிட்யூட்டரி சுரப்பி' சார்ந்து வருவதை, 'சென்ட்ரல் பிரிகோசியஸ் பியூபெர்ட்டி' என்றும், 'பிட்யூட்டரி சுரப்பி' தொடர்பு இல்லாமல் இருப்பது 'பெரிபெரல் பிரிகோசியஸ் பியூபெர்ட்டி' என்றும் கூறுகின்றனர். இதுபோன்ற பிரச்னை, மூளையில் கட்டி, அடிபடுதல், மரபியல் நோய்கள் காரணமாகவும், அதிவிரைவில் பூப்பெய்தும் பிரச்னை ஏற்படுகிறது. உணவு பழக்க வழக்கம், மாசு நிறைந்த சுற்றுப்புறச் சூழல், ரசாயனங்கள் கலந்த உணவுகள் பயன்பாடு இவை அனைத்தும் இதற்கான முக்கிய காரணங்கள். தேசிய குழந்தைகள் நல குழும தமிழக பிரிவு தலைவர் டாக்டர் ராஜேந்திரன் கூறியதாவது: இரண்டு வயது குழந்தைக்கு மாதவிடாய் துவங்கியதால், அதிர்ச்சியடைந்த பெற்றோர், அச்சத்துடன் சிகிச்சைக்கு அழைத்து வந்தனர். அக்குழந்தைக்கு மூளையில் கட்டி இருப்பதும், ஹார்மோன் குறைபாடு இருப்பதும் கண்டறியப்பட்டு, சிகிச்சை அளிக்கப்படுகிறது. 8 வயதுக்கு முன் பூப்பெய்தும் குழந்தைகளை, பெற்றோர் ஒரு முறை மருத்துவர்களிடம் பரிசோதனை செய்து கொள்வது அவசியம். தற்போதைய வாழ்க்கை முறை, மரபியல் மாற்றங்கள், குழந்தைகள் மத்தியில் காணப்படும் உடல் பருமன் போன்றவையால் முன்கூட்டி பூப்படைவதை தவிர்க்க முடிவதில்லை. குழந்தைகளுக்கு சரியான உணவு பழக்க வழக்கத்தை கற்றுக்கொடுக்க வேண்டும். தவிர, நடனம், விளையாட்டு போன்றவற்றில் ஈடுபடுத்த வேண்டும். ஆறு வயதுக்குள் பூப்பெய்துவதை இரண்டு வகையாக பிரிக்கிறோம். 'பிட்யூட்டரி சுரப்பி' சார்ந்து வருவதை, 'சென்டரல் பிரிகோசியஸ் பியூபெர்ட்டி' என்றும், 'பிட்யூட்டரி சுரப்பி' தொடர்பு இல்லாமல் இருப்பது 'பெரிபெரல் பிரிகோசியஸ் பியூபெர்ட்டி' என்று கூறுவோம். இதுபோல், அதிவிரைவில் பூப்பெய்தும் குழந்தைகளுக்கு எலும்பு வளர்ச்சி நின்று, உயரம் குறைதல், ஹார்மோன் பிரச்னை, உளவியல் பிரச்னை ஏற்படும். பெற்றோர் இதற்கு உறுதுணையாக நிற்பது அவசியம். இதற்கு கட்டாயம் பரிசோதனை செய்து சிகிச்சை எடுத்துக் கொள்ள வேண்டும். இவ்வாறு, அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை