கோவை, ; கோவை - திண்டுக்கல் இடையேயான மெமு ரயில், நேற்று இயக்கப்பட்டது. பெரியளவில் பயணிகள் கூட்டம் காணப்படவில்லை.தீபாவளி பண்டிகைக்கு, பயணிகள் நெரிசலைக் குறைக்கும் வகையில், கோவை - திண்டுக்கல் இடையே, முன்பதிவில்லா சிறப்பு ரயில் சேவை அறிவிக்கப்பட்டது. இந்த சேவை, நேற்று முதல் நவ., 6 வரை (நவ., 3 தவிர) இயக்கப்படும்.கோவை - திண்டுக்கல்(06106) காலை 9:35 மணிக்கு புறப்பட்டு, மதியம், 1:10 மணிக்கு திண்டுக்கல் சென்றடையும். திண்டுக்கல் - கோவை(06107) மெமு ரயில், திண்டுக்கலில் இருந்து மதியம், 2:00 மணிக்கு புறப்பட்டு, மாலை, 5:50 மணிக்கு கோவை வந்தடையும். எட்டு பெட்டிகள் கொண்ட இருந்த ரயிலில், 2400 பயணிகள் பயணம் செய்யலாம்.பயணிகள் யூ.டி.எஸ்., செயலி வாயிலாக, டிக்கெட்டுகளை முன்பதிவு செய்யலாம். இந்த ரயில் கிணத்துக்கடவு, பொள்ளாச்சி, உடுமலை, பழனி ஆகிய இடங்களில் நின்று செல்லும்.நேற்று காலை ரயில், கோவையிலிருந்து புறப்பட்டது. போதியளவு விழிப்புணர்வு இல்லாததாலும், கடைசி நேரத்தில் அறிவிக்கப்பட்டதாலும், குறைந்தளவு பயணிகளே பயணித்தனர். வரும் நாட்களில் பயணிகளின் எண்ணிக்கை அதிகரிக்கும் என, ரயில்வே அதிகாரிகள் தெரிவித்தனர்.