உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / போலீசாருக்கு மன ரீதியான பயிற்சி முக்கியம்: தமிழக அரசுக்கு முன்னாள் டி.ஜி.பி., ரவி யோசனை

போலீசாருக்கு மன ரீதியான பயிற்சி முக்கியம்: தமிழக அரசுக்கு முன்னாள் டி.ஜி.பி., ரவி யோசனை

கோவை: ''போலீசாருக்கு மன ரீதியான பயிற்சி அளித்தால் மட்டுமே, 'லாக் அப் - டெத்' சம்பவங்களை தடுக்க முடியும்,'' என, முன்னாள் டி.ஜி.பி., ரவி தெரிவித்தார்.சிவகங்கை மாவட்டம், மடப்புரம் பத்ரகாளியம்மன் கோவிலுக்கு வந்த பெண்ணின் காரில் இருந்த நகை காணாமல் போனது தொடர்பாக, காவலாளி அஜித்குமாரை, போலீசார் விசாரணைக்கு அழைத்துச் சென்று தாக்கியதில், அவர் உயிரிழந்த சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இச்சம்பவம் குறித்து, ஓய்வு பெற்ற டி.ஜி.பி., ரவி கூறியதாவது:போலீஸ் 'சிஸ்டத்தில்' மாற்றங்கள் கொண்டு வர வேண்டும். உடல் தகுதிக்கு அதிக முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது. தேர்வின் போதே உடல் தகுதி உடையவர்களே தேர்வு செய்யப்படுகின்றனர். அவர்களுக்கு மேலும், மாதக்கணக்கில் உடல் தகுதி பயிற்சிகள் அளிக்கப்படுகின்றன. உடல் தகுதி மட்டுமே ஒரு போலீஸ்காரருக்கு போதுமானதல்ல. பயிற்சி காலத்தை அதிகரிக்க வேண்டும். குறைந்தது, ஒன்றரை வருடமாவது பயிற்சி அளிக்க வேண்டும். மன ரீதியான பயிற்சிகள் அதிகம் அளிக்க வேண்டும்.'சைக்கோமெட்ரிக் டெஸ்ட்' எனப்படும் பரிசோதனை மேற்கொண்டு, அந்த போலீஸ்காரர் வழக்கு விசாரணையை பொறுமையாக மேற்கொள்ள தகுதியானவர் தானா என்பது உறுதி செய்ய வேண்டும். அப்பாவி யார், குற்றவாளி யார் என்பதை கண்டுபிடிக்கும் திறமை இருக்கிறதா என்பதையும், குற்றம் சாட்டப்பட்ட நபரிடம் இருந்து தகவல்களை எப்படி பெற வேண்டும் என்பதையும் அறிந்திருக்க வேண்டும்.இந்த டெஸ்ட் வாயிலாக, விசாரணையின் போது, எல்லையை மீறி, அடித்து, உதைத்து வன்முறை வாயிலாக தகவல்களை பெற்று விட முடியும் என நினைக்கும் நபரா, என்பதை கண்டறிந்து, அதற்கேற்ப பணியமர்த்த வேண்டும்.வழக்கை விசாரிக்கும் போலீசாருக்கு, 'சீக்கிரம் விசாரித்து முடிக்க வேண்டும்' என இலக்கு நிர்ணயிக்கக்கூடாது. இதுவே அனைத்து பிரச்னைக்கும் காரணமாக உள்ளது. ஒரு நபரிடம் இருந்து தகவலை பெற வேண்டும் என்றால், 10 மணி நேரம் விசாரிக்க வேண்டும். தற்போதுள்ள போலீஸ்காரர்கள் எத்தனை பேருக்கு இந்த பொறுமை உள்ளது?பொறுமை இல்லாததால், இதுபோன்ற சம்பவங்கள் அரங்கேறுகின்றன. இப்படி ஒரு சம்பவம் நடந்தால், கொலை செய்த போலீஸ்காரர்கள் மட்டுமின்றி, அவர்களுக்கு உத்தரவிட்ட அதிகாரி, அவருக்கு மேல் உள்ள அதிகாரி, மண்டல அளவிலான அதிகாரி அனைவரும் பொறுப்பேற்க வேண்டும்.இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை