எம்.ஜி.ஆர்., மார்க்கெட்டுக்கு கிடைத்து விட்டது புதிய ரோடு
கோவை; கோவை எம்.ஜி.ஆர்., மார்க்கெட்டில் வியாபாரிகளின் வசதிக்காக, புதிதாக ரோடு போடப்பட்டுள்ளது.கோவை எம்.ஜி.ஆர்., மார்க்கெட்டுக்கு ஊட்டி, பெங்களூரு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து காய்கறி விற்பனைக்காக கொண்டு வரப்படுகின்றன. மொத்த மார்க்கெட் என்பதால் இங்கிருந்து கோவை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகள், கேரளா ஆகியவற்றுக்கு காய்கறி கொண்டு செல்லப்படுகின்றன.தினமும், பல ஆயிரம் பேர் வந்து செல்லும் இந்த மார்க்கெட்டின் நிலை மிகவும் மோசமாக இருந்தது. மழை காலத்தில் மார்க்கெட்டுக்குள் கால் வைக்க முடியாத நிலையே இருந்து வந்தது. கடந்த மாதம் பெய்த மழையால் மார்க்கெட்டுக்குள், வியாபாரிகள் நுழைய முடியாத அளவுக்கு நீர் தேங்கி, சேறும் சகதியுமாக காணப்பட்டது.மார்க்கெட்டுக்குள் இருந்த சேற்றில் காய்கறி ஏற்றி வந்த, பல வாகனங்கள் சிக்கிக் கொண்டன. இது குறித்து நமது நாளிதழில் படத்துடன் செய்தி வெளியானது. இதையடுத்து, எம்.ஜி.ஆர்., மார்க்கெட் வளாகம் சீர் செய்யப்பட்டு அப்பகுதியில் புதிதாக ரோடு அமைக்கும் பணிகள் நடந்து வருகின்றன. வியாபாரிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.