மிதக்கிறது எம்.ஜி.ஆர்.மார்க்கெட்; தத்தளிக்கிறது வியாபாரிகள் வாழ்க்கை
கோவை; கோவை எம்.ஜி.ஆர்., மார்க்கெட்டில், நேற்று குளம் போல் தேங்கிய மழை நீரால் வியாபாரிகள், பணியாளர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டனர். காய்கறி மூட்டைகளில் தண்ணீர் புகுந்ததால், ஏராளமான காய்கறி சேதமாகின. மேட்டுப்பாளையம் சாலையில், தமிழ்நாடு அரசு போக்குவரத்துக்கழக பணிமனை அருகே, 3.5 ஏக்கர் பரப்பளவில் எம்.ஜி.ஆர்., மொத்த காய்கறி மார்க்கெட் அமைந்துள்ளது. இங்கு, 2023ல் சாலை மேம்பாடு, மழைநீர் வடிகால் செயல்பாடுகளுக்காக 3 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டது. நீண்ட இழுபறிக்கு பின்னர் கடந்த, மே மாதம் பணிகள் சூடுபிடித்தன. பெரும்பாலான பணிகள் முடிந்த நிலையில், வளாகத்தின் ஒரு பகுதியில் சாலை அமைப்பது மற்றும் மழை நீர் வடிகால் மேம்பாடு பணிகள் மட்டும் நிலுவையில் உள்ளன. கடந்த, பத்து நாட்களாக பணிகள் நடக்காமல் இருந்ததால், தற்போது பெய்த மழைக்கு மீண்டும் வளாகத்தில் மழை நீர் தேங்கியுள்ளது. எம்.ஜி.ஆர்., மார்க்கெட் மொத்த வியாபாரிகள் சங்க நிர்வாகி பழனிசாமி கூறுகையில், ''ஏற்கனவே சேறு பாதிப்பால், மிகவும் மோசமாக இருந்த மார்க்கெட், நீங்கள்(தினமலர்) செய்தி, படம் வெளியிட்ட பின், அதிகாரிகள் பணிகளை துவக்கினர். இப்போது இறுதிகட்ட வேலைகள் மட்டுமே உள்ளன. இப்பணிகளை விரைவுபடுத்தி முடிக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். நாள் ஒன்றுக்கு 1,000 வாகனங்கள் வந்து செல்கின்றன. பொருட்களை ஏற்றி, இறக்குவதில் கடும் சிரமங்கள் உள்ளன. மழை நீரில் பொருட்கள் வீணாகும் சூழல் உள்ளது. இரண்டு ஆண்டுகளுக்கு முன் துவங்கிய பணி இது. மேலும் தாமதம் ஏற்படுத்தாமல், ஒரு பகுதி சாலையையும், மழைநீர் வடிகால் வசதிளையும் விரைந்து ஏற்படுத்த வேண்டும்,'' என்றார்.