உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் /  மரப்பேட்டை பள்ளி அருகே சுகாதாரம் பாதிப்பு:  எம்.எல்.ஏ. ஜெயராமன் குற்றச்சாட்டு 

 மரப்பேட்டை பள்ளி அருகே சுகாதாரம் பாதிப்பு:  எம்.எல்.ஏ. ஜெயராமன் குற்றச்சாட்டு 

பொள்ளாச்சி: பொள்ளாச்சி மரப்பேட்டை பள்ளி சுற்றுப்பகுதியை, திறந்தவெளி கழிப்பிடமாக பயன்படுத்துவதால், சுகாதாரம் பாதித்துள்ளது. பொள்ளாச்சி மரப்பேட்டை நகராட்சி நடுநிலைப்பள்ளி அருகே, திறந்த வெளியை கழிப்பிடமாக பயன்படுத்துவதால், சுகாதாரம் பாதிப்பதாக புகார் எழுந்துள்ளது. இதுகுறித்து எம்.எல்.ஏ. பொள்ளாச்சி ஜெயராமன் ஆய்வு செய்தார். ஆய்வின் போது, நகர செயலாளர் கிருஷ்ணகுமார், மாவட்ட ஜெ. பேரவை செயலாளர் விஜயகுமார் உள்ளிட்டோர் உடனிருந்தனர். எம்.எல்.ஏ. கூறியதாவது: பொள்ளாச்சி, மரப்பேட்டை நகராட்சி நடு நிலைப்பள்ளி அருகே செயல்பட்ட பொதுக்கழிப்பிடம் நீண்ட நாட்களாக பூட்டி வைக்கப்பட்டுள்ளது. இதனால், பொதுமக்கள், பள்ளி அருகே சாலையோரத்தை திறந்தவெளி கழிப்பிடமாக பயன்படுத்துவதால், பள்ளி மாணவர்களுக்கு பாதிப்பாக உள்ளது. எனவே, உடனடியாக கழிப்பிடத்தை திறக்க வேண்டும். 31வது வார்டில், தெருவிளக்குகள் பெரும்பாலும் எரிவதில்லை. இதனால், இரவு நேரங்களில் மக்கள் சிரமப்படுகின்றனர். அ.தி.மு.க. ஆட்சியில் மரப்பேட்டை பள்ளம், ஆண்டுக்கொரு முறை துார்வாரப்பட்டு தண்ணீர் முறையாக சென்று கொண்டிருந்தது. கடந்த, நான்கு ஆண்டுகளாக ஒரு முறை கூட துார்வாரப்படாததால், செடி, மரங்கள் வளர்ந்து மூன்றடிக்கு மேல் தண்ணீர் தேங்கி நிற்கிறது. இதை சுத்தம் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும். வடிகால்கள் துார்வாரப்படாமல் உள்ளதால், மழைக்காலங்களில் தண்ணீர் சாக்கடை வழியாக செல்ல வழியில்லாமல் வீடுகளுக்குள் புகுந்து விடுகிறது. பொள்ளாச்சி நகராட்சி மயானத்தில் புதர் செடிகள் அதிகளவு வளர்ந்துள்ளன. அவற்றை அகற்றி சுத்தம் செய்ய வேண்டும். மரப்பேட்டையில், நில வாடகை பெற்று, 70 ஆண்டுகளாக மக்கள் வசிக்கின்றனர். தனியார் ஒருவர், இப்பகுதி மக்கள் குடியிருக்கும் வீடுகளை காலி செய்ய வேண்டி, நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். அதில், நீதிமன்றம் வீடுகளை காலி செய்ய உத்தரவிட்டுள்ளது. பொதுமக்களுக்கு கால அவகாசம் வழங்க வேண்டும். இது குறித்து, நகராட்சி கமிஷனர் குமரனிடம் மனு கொடுத்து வலியுறுத்தப் பட்டுள்ளது. இவ்வாறு, அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை