இன்னும் 3 நாளுக்கு மிதமான மழை! பண்ணைக்குட்டைகளில் தண்ணீர் சேமிக்கலாம்
கோவை : கோவை மாவட்டத்தில், வரும் 22ம் தேதி வரை, லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்ய வாய்ப்புள்ளது.மழைநீரை விவசாயிகள் பண்ணைக்குட்டைகளில் சேமிக்கலாம் என, வேளாண் பல்கலையில் உள்ள வேளாண் காலநிலை ஆராய்ச்சி மையம் அறிவுறுத்தியுள்ளது.மையத்தின் தலைவர் சத்தியமூர்த்தி வெளியிட்டுள்ள அறிக்கை:வரும் 22ம் தேதி வரை லேசானது முதல் மிதமான வரை மழை பெய்யக்கூடும். மணிக்கு 12 முதல் 24 கி.மீ., வேகத்தில் காற்று எதிர்பார்க்கப்படுகிறது.மழை பெய்வதால், அதிகப்படியான மழை நீரை போதிய வடிகால் வசதி செய்து, பண்ணைக்குட்டைகளில் சேமிப்பதால் தேவையான சமயங்களில் பயன்படுத்தலாம்.மழை காரணமாக, இறவை சோளண், கம்பு, மக்காச்சோளம் மற்றும் நிலக்கடலை விதைப்பை ஒத்திவைக்க வேண்டும். ஏற்கனவே விதைத்த இடங்களில் போதிய வடிகால் வசதி செய்யவும். சாரல் மழை காரணமாக அடிச்சாம்பல் நோய் வரலாம் என்பதால், மெட்டாலாக்ஸில் எம் 31.8 சதவீதம் இ.எஸ்., என்ற மருந்தை பரிந்துரைக்கப்பட்ட அளவில் தெளிக்கவும்.மண்ணின் ஈரப்பதத்தைக் கொண்டு பின்பருவ கரும்பு நடவை போதிய வடிகால் வசதி செய்து, தொடர்ந்து மேற்கொள்ளவும்.இவ்வாறு, அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வாழையை
வாழ வைக்க...இடியுடன் கூடிய மழையும் சுழற்காற்றும் எதிர்பார்க்கப்படுவதால், 5 மாதங்களுக்கு மேலுள்ள வாழை மரங்களுக்கு முட்டுக் கொடுக்கவும்.